ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு அணியினரும் ஜான் பாண்டியனை சந்தித்து ஆதரவு கேட்ட நிலையில், காலையில் இரட்டை இலைக்கு ஆதரவு அளிப்பதாகச் சொன்ன ஜான் பாண்டியன், மாலையே பாஜகவின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு என்று கூறினார். இந்நிலையில், இரட்டை இலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்த மாட்டார்கள் என்று தான் நம்புவதாக ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல கட்சிகள், பாஜகவின் நிலைப்பாட்டைப் பொறுத்தே தங்கள் முடிவைத் தெரிவிக்கும் சூழல் இருக்கிறது. பாஜக இன்னும் தங்கள் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணியினருமே இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒரு முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; ஆகையால் அவரை அங்கீகரித்தும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியும் உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்வைத்து ஈபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த முறையீட்டு மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், இன்று (ஜனவரி 30) இந்த மனு மீது விசாரணை நடத்த பட்டியலிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணையும், பின்னர் சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க உச்ச நிதிமன்றம் உத்தரவிட்டால் அது ஓபிஎஸ் அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படும். இரட்டை இலை சின்னத்தை உச்சநீதிமன்றம் முடக்கினால் சுயேட்சை சின்னத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையைப் பொறுத்தே வேட்பாளர் அறிவிப்பும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர்களின் 26ஆம் ஆண்டு தைப்பூச முதல் மரியாதை மண்டகப்படி விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருநெல்வேலியிலிருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வருகை தந்தார். அப்போது மாவட்ட எல்லையில், தமமுக மேற்கு மாவட்டச் செயலாளர் முத்துரத்தினவேல் தலைமையில் ஜான் பாண்டியனுக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஜான் பாண்டியன் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு நாளை (இன்று) வெளியாகிறது. அதன் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகள் கூடி ஒற்றைக் கருத்துடன் முடிவு செய்வோம். நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அந்த சமயத்தில் அறிவிக்கப்படும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்பதை ஏற்கனவே தெரிவித்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.