முதல்வர் ஸ்டாலினின் பாசத்தில் இன்று புதிதாய்ப் பிறந்தேன்: நாஞ்சில் சம்பத்!

“முதல்வரின் தனிக் கருணையில் இன்று புதிதாய் பிறந்தேன். முதல்வரின் பரிவிற்கும், பாசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில் சந்திக்கிறேன்” என திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத், மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2012ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். பின்னர் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்த நாஞ்சில் சம்பத், கடந்த சில ஆண்டுகளாக திமுக நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வருகிறார். மேலும் திரைப்படங்களில் நடிப்பதோடு இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கெடுத்து வருகிறார்.

இந்நிலையில் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் நாஞ்சில் சம்பத்துக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ் ஆகியோரை தொடர்புகொண்டு, நாஞ்சில் சம்பத்துக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், நாஞ்சில் சம்பத் தற்போது உடல்நிலை தேறி, நலமடைந்துள்ளார். இதுகுறித்து நாஞ்சில் சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில், “முதலமைச்சரின் தனிக் கருணையில் இன்று புதிதாய் பிறந்தேன். அவரது பரிவிற்கும், பாசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில் சந்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.