இரட்டை இலை தொடர்பான உத்தரவு பொதுக்குழு தீர்ப்புக்கு பொருந்தாது: உச்சநீதிமன்றம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னம் கோரும் இபிஎஸ்-ன் இடையீட்டு மனு மீதான உத்தரவு என்பது அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்கு பொருந்தாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதிமுவின் ஜூலை 11 பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இப்பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே அதிமுக சட்டவிதிகளின் படி அதிமுகவுக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும் உரிமை கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்க இருக்கும் தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டாலும் மேற்கோள் காட்டக் கூடியதான ஒரு தீர்ப்பாக அதிமுக வழக்கு தீர்ப்பு இருக்கும் என கருதப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனாலும் மேலும் சில வாரங்கள் கழித்தே அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என உச்சநீதிமன்ற வட்டாரங்கள் கூறி வந்தன. இந்த நிலையில்தான் அதாவது ஒரு வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் திடீரென இவ்வழக்கிலேயே ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இடையீட்டு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ளார். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அங்கீகரிக்கும் வகையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் தாம் கையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. ஆகையால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் தாம் என்பதை ஏற்று இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ய உரிய உத்தரவிட வேண்டும் என்று இடையீட்டு மனுவில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இந்த இடையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலாப பெஞ்ச் இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். ஆனால் ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இது ஒரு பெக்யூலியர் கேஸ். இப்போது தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு மீது மட்டுமே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். மூல வழக்கான அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கும் இப்போது இடையீட்டு மனு மீதான உத்தரவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இடையீட்டு மனு தொடர்பான விவகாரத்தை மட்டுமே விசாரித்து உத்தரவிடுவோம் என விளக்கமாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணையமும் ஓபிஎஸ் தரப்பும் 3 நாட்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்தானது அதிமுக வழக்கு விவகாரத்தில் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.