வன்முறையை விதைக்கும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு அதன் வலியை புரிந்து கொள்ள முடியாது என கடுமையாகவும் உருக்கமாகவும் சாடினார் ராகுல் காந்தி.
பாரத் ஜோடா யாத்திரையை கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி தேசத்தின் தென்முனையான கன்னியாகுமரியில் தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் இருந்து இப்போது தேசத்தின் வடமுனையான காஷ்மீரை நடந்தே சென்றடைந்தார் ராகுல் காந்தி. கடந்த 5 மாதங்களாக நாட்டின் பல மாநிலங்கள் வழியாக சுமார் 4,000 கி.மீ தொலைவு நடந்தே பயணித்து மக்களுடன் உரையாடிவிட்டு
ராகுல் காந்தியின் மகத்தான இந்த அரசியல் பயணம் அரசியலில் எத்தனை உயரத்தை தரப் போகிறது என்பது ஒரு பக்கம். ராகுல் காந்தி, சிறியவர், முதிர்ச்சி இல்லாதவர் என்ற விமர்சனங்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்திருக்கிறது இந்த யாத்திரை என்பது மிகையல்ல. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை நிறைவு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
ஸ்ரீநகரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே நடைபெற்றது இந்த பொதுக் கூட்டம். இதில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
இப்பாதயாத்திரையில் நான் கற்றுக் கொண்டது ஏராளம். தொடக்கத்தில் என்னால் 6 அல்லது 7 மணிநேரம்தான் நடக்க முடியும். அதற்கு மேல் முடியாது என நினைத்தேன். அப்போது ஒரு சிறுமி என்னை நோக்கி வந்து எனக்காக எழுதியதாக ஒன்றை கொடுத்தார். அதை நான் படித்து பார்த்தேன். அதில், நான் உங்களுடன் இணைந்து நடந்து வர இயலாது.. உள்ளத்தால் உங்களுடன் நான் நடக்கிறேன். நீங்கள் நடந்து செல்வது எனக்காக.. என் எதிர்காலத்துக்காக என அந்த சிறுமி எழுதி இருந்தார். எனக்கு அப்போதே அத்தனை வலியும் போய்விட்டது.
புல்வாமா தாக்குதலின் போது நீங்கள் வீரமரணங்களை போன் மூலம் கேட்டிருப்பீர்கள்.. அப்படித்தான் நான் அமெரிக்காவில் இருந்த போது என் தந்தையார் படுகொலை செய்யப்பட்டதாக போன் கால் வந்தது. இத்தகைய தொலைபேசி அழைப்புகள் எத்தனை வேதனையையும் வலியையும் தரும் என்பதை நானும் உணர்வேன். இத்தகைய தொலைபேசி அழைப்புகள் நமது மகன்களுக்கு அம்மாக்களுக்கு யாருக்கும் வந்துவிடவே கூடாது என்பதற்காகவே இந்த யாத்திரையை நடத்தினேன். வன்முறையை விதைக்கின்ற பிரதமர் மோடி, அமித்ஷா, அஜித் தோவல், ஆர்.எஸ்.எஸ்-க்கு இப்படியான வன்முறையின் வலி புரியாது. ஆனால் எங்களால் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவினுடைய அடிப்படையை மாற்றக் கூடிய சித்தாந்தத்தை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.
ஜம்மு காஷ்மீரில் நீங்கள் நடக்க வேண்டாம்- வாகனத்தில் செல்லுங்கள் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். நான் நடந்து சென்றால் என் மீது கையெறி குண்டுகள் வீசப்படலாம் என்றனர். என்னை வெறுப்பவர்கள், என் உடையை வெள்ளை நிறத்தில் இருந்து ரத்த சிவப்பாக விரும்புகிறவர்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என நினைத்து கொண்டேன். ஆனால் ஜம்மு காஷ்மீர் மக்கள் வன்முறைக்கு பதில் அன்பையே எனக்கு தந்தனர். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.