காஷ்மீரின் லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றிய ராகுல்காந்தி!

காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிகவும் முக்கிய பகுதியான லால் சவுக்கில் ராகுல்காந்தி தேசியக்கொடி ஏற்றினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 145 நாட்கள் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டரை கடந்த ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று நிறைவடைகிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் – ஐ – காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட கூட்டத்துடன் ராகுல்காந்தியின் யாத்திரை நிறைவடைகிறது.

இந்நிலையில், நேற்று பாத யாத்திரையின் இறுதி நிகழ்வாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் சதுர்க்கத்தில் ராகுல்காந்தி தேசியக்கொடி ஏற்றினார். இது தொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றியதன் மூலம் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. வெறுப்பு தோல்வியடையும், அன்பு எப்போதும் வெற்றிபெறும். இந்தியாவில் நம்பிக்கையின் புதிய விடியல் ஏற்படும்’ என தெரிவித்துள்ளார்.

தேசிய கொடி ஏற்றிய ராகுல் காந்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிய பாதயாத்திரை நிறைவடைந்த நிலையில், மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிய யாத்திரை நடத்துவீர்களா? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

இந்த யாத்திரை தற்போதுதான் முடிந்துள்ளது. எனவே இந்த கேள்விக்கு இப்போதே பதில் சொல்ல முடியாது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். யாத்திரை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்றது. ஆனால் அதன் விளைவு நாடு முழுவதும் இருந்தது. நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற்ற பின்னரும் நிலைமை சீரடையவில்லை என குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, நிலைமை மிகவும் பாதுகாப்பாக இருந்தால், அமித்ஷா ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை நடக்கட்டும் என்றும் தெரிவித்தார்.