குஜராத் கலவரம் தொடர்பாக, பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தன்னிலை விளக்கம் தர வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளதாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்ற உள்ளார். தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சமூகமாக நடத்துவது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலத் ஜோஷி, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அதிமுகவை பொறுத்தவரையில் மக்களவை சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத், மாநிலங்களவை சார்பில் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து டி.ஆர்.பாலு கூறியதாவது:-
தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரம், தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறினோம். அதேபோல் இலங்கை தமிழர்களுக்கான அதிகார பகிர்வு, சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான உதவித் தொகை, மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து, மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து குரல் எழுப்புவோம்.
குஜராத் கலவரம் பற்றிய பிபிசியின் ஆவணப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதானி குழுமத்தின் நஷ்ட விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட உள்ளது. 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் தொடங்கப்படுவது பற்றி பேச வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். மேலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவும், ஜாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பற்றிய கேள்விக்கு, திட்டங்கள் நிறைவேற்றுவதற்காக மசூதி, மாதா கோயில், கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, இழப்பீடோ அல்லது அதேபோல் மீண்டும் கோயில்களோ கட்டப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு பாதியை மட்டும் வெளியிட்டு கட் செய்திருக்கிறார்கள். அதைப்பற்றி கவலையில்லை. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை என்று தெரிவித்தார்.