ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி பொருளாளர் படுகொலை!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கொலை செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் என்பதால் சீமான் அஞ்சலி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி கிருஷ்ணசாமி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன்கள் கௌதம், கார்த்திகேயன் ஆகிய இருவரும் வீட்டிலேயே மசாலா பொடி, தேன், செக்கு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில் கார்த்திகேயன் ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் பொருளாளராக இருந்தார்.

இந்த நிலையில், இவரது உறவினரான மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் நேற்றிரவு கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று அண்ணன், தம்பி இருவரையும் வெளியே அழைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணன், தம்பி இருவரையும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அண்ணன் தம்பி இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படுகொலை சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் உருக்கமாக கூறியுள்ளதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளர் என் ஆருயிர் தம்பி லோ.கார்த்திகேயன் மற்றும் அவருடைய உடன் பிறந்த அண்ணன் கௌதம் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரும் அடைந்தேன். பெற்ற இருபிள்ளைகளை இழந்து பெருந்துயரில் தவிக்கும் தம்பி கார்த்திகேயன் தாய், தந்தையருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவது என்றே தெரியாமல் மனம் வேதனையில் உழல்கிறது.

தன் வேலை, தன் குடும்பம் என்று மட்டும் சுயநலமாய் இல்லாமல், தாய் மண்ணிற்கும், தான் பிறந்த பெருமைமிக்க இனத்திற்கும் தொண்டுபுரிய வேண்டுமென்ற தூய உள்ளத்துடன் வாழ்ந்தவன் அன்புத் தம்பி கார்த்திகேயன். நல்ல அரசை நிறுவிவிட்டால் மக்களின் அனைத்து தேவைகளும் தானாக நிறைவேறிவிடும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் நாம் தமிழர் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் தீவிர களப்பணியாற்றி 22 வயதிலேயே ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளராகத் திறம்படச் செயல்பட்டவர் அன்புத்தம்பி கார்த்திகேயன். அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி
இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கான பணிகளில் துடிப்புடன் பணியாற்றிய தம்பியின் உழைப்பு போற்றுதற்குரியது.

அன்றைய கூட்டம் முடிந்த பிறகு தொடர்வண்டி நிலையம்வரை வந்து வழியனுப்பிய, பெரும் பாசத்திற்குரிய என் தம்பி இன்று உயிரோடு இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. கண்களில் கண்ணீர் பெருகுகிறது. தம்பி கார்த்திகேயனின் இழப்பென்பது வளர்ந்துவரும் தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். தம்பியின் பெற்றோர்க்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். தமிழ்நாடு அரசு தம்பி கார்த்திகேயன் மற்றும் அவருடைய சகோதரர் படுகொலைக்குக் காரணமானவர்களையும், அதன் பின்னணியில் உள்ளவர்களையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தம்பிகள் கௌதம், கார்த்திகேயன் இருவருக்கும் எனது கண்ணீர் வணக்கம்! இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.