அமர்த்தியா சென்னை பாஜக பழிவாங்குகிறது: மம்தா பானர்ஜி!

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னை பாஜக பழிவாங்குவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்தியா சென் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சிறுபான்மையினர் விரோத போக்கு, வெறுப்பு பேச்சு உள்ளிட்ட செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தியா முஸ்லீம்களை தனிமைபடுத்தி ஒதுக்குவதற்கு ஒரு நாள் வருத்தப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 24ம் தேதி சாந்திநிகேதனில் முறைகேடாக வைத்துள்ள நிலங்களை ஒப்படைக்க கோரி நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்னுக்கு விஸ்வபாரதி பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியது. தொடர்ச்சியாக மூன்று முறை அமர்த்திய சென்னுக்கு இந்த விவகாரம் தொடர்பாக விஸ்வபாரதி பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியது. ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த அமர்த்திய சென், சாந்திநிகேதனில் நான் வைத்துள்ள நிலங்கள் அனைத்தும் என் அப்பாவால் வாங்கப்பட்டது. சில நிலங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். மேலும், இங்கிருந்து என்னை வெளியேற்ற முயற்சி நடக்கிறது எனவும், இந்த அரசியல் தனக்கு புரியவில்லை எனவும் அமர்த்தியா சென் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாந்தி நிகேதனில் உள்ள அமர்த்தியா சென் வீட்டுக்கு சென்று அவர் வைத்துள்ள நிலங்களுக்கு சொந்தமான ஆவணங்களை இன்று வழங்கினார். அதன்பிறகு மம்தா பானர்ஜி பேசியதாவது:-

இதற்கு மேல் அமர்த்தியா சென்னை இழிவுபடுத்துவதை பொறுத்துக் கொள்ளமுடியாது. அவர் வைத்துள்ள நிலங்களின் ஆவணங்களை கொடுத்துள்ளேன். விஸ்வபாரதி பல்கலைக்கழகம் கூறுவது முற்றிலும் தவறு. பல்கலைக்கழகம் மீது அரசு சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் ஆதாரங்களை கேட்டு அவரை தொந்தரவு செய்ய முடியாது. சர்ச்சைக்குரிய நிலம் அமர்த்திய சென்னினுடையது தான் என்பதை இந்த ஆவணங்கள் உறுதிபடுத்தும்.

பல்வேறு அரசியல் காழ்ப்புணர்வுகள் இருப்பதால் அமர்த்திய சென்னிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பிரதமர் மோடியை வேந்தராக கொண்டுள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பாஜகவின் கட்டளைகளை ஏற்று இதுபோன்ற நடவடிக்கைகளை செய்து வருகிறார். ரவீந்திரநாத் தாகூரால் உருவாக்கப்பட்ட பல்கலைகழகத்தை காவி மயமாக்க பாஜக முயற்சிக்கிறது. மத்திய அரசு மற்றும் பாஜகவினை கடந்த காலங்களில் அமர்த்தியா சென் விமர்சித்ததற்காக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

இது குறித்து அமர்த்திய சென் கூறும்போது, ‘‘சொந்த நிலத்தில் இருந்து என்னை வெளியேற்ற அழுத்தங்கள் கொடுத்த போது எதிர்பாராத விதமாக மேற்குவங்க முதல்வர் ஆவணங்களை கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி. இது இத்துடன் முடிவடையும் என்று நான் நினைக்கவில்லை. கருத்தியல் வேறுபாடுகள் காரணமாக என் வீட்டைப் பறிக்க முயற்சிப்பவர்கள் அவரைத் திரும்பப் பெற வேறு வழியைக் கண்டுபிடிப்பார்கள். நான் மதச்சார்பற்ற சூழலில் பிறந்து வளர்ந்தேன், மதச்சார்பின்மையை நம்புகிறேன். வகுப்புவாத அரசியலில் ஈடுபடுபவர்கள், மதச்சார்பின்மையை போதிக்கும் இதுபோன்ற கருத்துக்களை விரும்புவதில்லை’’ என அவர் தெரிவித்தார்.