பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுச்சபை தலைவர் சபா கொரோசி சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை ஐ.நா. பொதுச்சபை தலைவர் சபா கொரோசி நேரில் சந்தித்து பேசினார்.

ஐ.நா. பொதுச்சபை தலைவர் சபா கொரோசி முதல் முறையாக இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், ‘முதல் முறையாக இந்தியா வந்துள்ள ஐ.நா. பொதுச்சபை தலைவர் சபா கொரோசியை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உலகளாவிய நீர் ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாங்கள் விவாதித்தோம். ஜி20 தலைமை என்ற முறையில் இந்தியாவுக்கான அவரது ஆதரவை வரவேற்கிறோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரையும் சபா கொரோசி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஐ.நா. சீர்திருத்தம், உலகளாவிய சவால்கள், உக்ரைன் போர் மற்றும் ஜி20 நிகழ்ச்சி நிரல்கள் குறித்து விவாதித்ததாக ஜெய்சங்கர் பின்னர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்த சந்திப்புகள் மிகவும் சிறப்பாக இருந்ததாக சபா கொரோசி பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.