பேனா பேனாவாக இருக்கக் கூடாது.. வரலாறு படைக்க வேண்டும்: காயத்ரி ரகுராம்

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் வைப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அக்கட்சியிலிருந்து விலகிய காயத்ரி ரகுராமோ தமிழக மக்களின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ரூ 81 கோடி மதிப்பீட்டில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 290 மீட்டர் தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்திற்கும் அமைக்கவுள்ளது. அதாவது மொத்தம் 650 மீட்டர் தொலைவில் கடலில் பாலம் அமைக்கப்பட்டு அதில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க மாதிரி வடிவங்கள் எல்லாமே தயாார் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கலைவாணர் அரங்கில் இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைய பேர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பாஜக சார்பில் கருத்து தெரிவித்த எம்சி முனுசாமி கூறுகையில் கடலில் நினைவு சின்னம் அமைப்பது மிகவும் அபத்தமானது. கடற்கரையை காக்கும் ஒரே சமுதாயம் மீனவர்கள்தான். மெரினா கடற்கரையில் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் உள்ளன. யாரும் கடற்கரைக்கு உள்ளே நினைவுச் சின்னம் அமைக்கவில்லை. கருணாநிதி தான் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தார். ஆனால் கருணாநிதிக்கு வைக்கப்படும் பேனா சின்னமோ 137அடியாகும். அப்படியென்றால் திருவள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா என முனுசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கருத்துக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பேனா பொதுவானது, பேனா சிலைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது வெறும் பேனாவாக இருக்கக் கூடாது. அனைவரும் பார்வையிடக் கூடிய புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும். இது சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். பேனா என்பது பல விஷயங்களைக் குறிக்கும். பேனா ஒரு சிறந்த கருவியாகும். சிறந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளது. அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.