ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்ற ஜெ.தீபா!

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சற்று முன்னர் நேரில் சந்தித்துப் பேசினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இந்தச் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்துப் பேசினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்புக்கு இடையே, ஜெ.தீபா ஓபிஎஸ்ஸை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இந்தச் சந்திப்பு அரசியல் தொடர்பானது இல்லை என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். தனது குடும்ப நிகழ்ச்சி தொடர்பாக ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்க வந்ததாகவும், அரசியல் தாண்டி ஓ.பன்னீர்செல்வம் எனக்கு நல்ல பரிச்சயம் என்றும் ஜெ.தீபா தெரிவித்தார்.
அதிமுக பிரச்சனை தொடர்பாக இப்போது கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றும் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.