பட்ஜெட் 2023-ல் ஏழை மக்களின் வளர்ச்சிக்குத் தேவையான அறிவிப்புகள் எதுவும் இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
பட்ஜெட் தாக்கல் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
இந்த ஆண்டு நடைபெறவுள்ள 4 மாநில தேர்தல்களை கருத்தில்கொண்டு நரேந்திர மோடி அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை. ஏழை மக்களுக்கான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான எந்த திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அரசு காலி பணியிடங்கள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழான திட்டங்களில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி, சசி தரூர் கூறுகையில், “இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்ற சில விசயங்கள் நன்றாக இருந்தது. அனைத்தையும் எதிர்மறையாக சொல்ல முடியாது. ஆனால், எனக்கு சில கேள்விகள் உள்ளன. ஏழை தொழிலாளர்கள் பற்றி அவர்கள் பேசவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பற்றி வாய் திறக்கவில்லை. பணவீக்கம் குறித்தும் பட்ஜெட்டில் எதுவும் இல்லை” என்றார்.