ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா திடீர் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஏற்கனவே, ஈரோட்டில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் அறிவிப்பை அரசியல் கட்சிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று காலை அதிமுக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் செந்தில் முருகன் போட்டியிடுவார். வேட்பாளர் செந்தில்முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை சந்தித்து ஆதரவு கேட்பேன். இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு எக்காலத்திலும் தடையாக இருக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த அறிமுகத்திற்கு பிறகு செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் அவர்கள் கேட்கையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்தியதால் இரட்டை இலை சின்னம் முடங்கும், வெற்றி வாய்ப்பும் பறி போகுமே என கேட்டனர். அதற்கு ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக நான் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன். கடந்த உள்ளாட்சி தேர்தலில் விண்ணப்பம் B-யில் கையெழுத்து வாங்க எடப்பாடி தரப்பை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் வந்தார். அவர் கொடுத்த விண்ணப்பங்களில் நான் கையெழுத்திட்டு கொடுத்தேன். இதுகுறித்து 4 நாட்களில் முடிவு அறிவிப்பதாக சொன்னார்கள், நான் காத்திருந்தேன். ஆனாலும் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார்கள். எனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாததற்கு நான் எந்த வகையிலும் காரணம் அல்ல. ஒரு வேளை எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த “இடைத்தேர்தலில் தென்னரசுவை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். எனவே ஒருங்கிணைப்பாளருக்கான கையெழுத்தை போடுங்கள்” என கேட்டு விண்ணப்பப் படிவத்தை கொடுத்தால் தாராளமாக கையெழுத்திட நான் ரெடி என்றார்.
மேலும் அதிமுக தலைமையிலான கூட்டணி என்பதால் பாஜகதானே இத்தனை தேர்தலில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் உங்களை அணுகியது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் நீங்கள் பாஜகவுக்காக காத்திருப்பது ஏன் என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ், தேசிய அளவில் பாஜகதான் தலைமை, தமிழக அளவில் அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என கூறிவிட்டார்கள். அது போல் கூட்டணி கட்சியான பாஜகவின் நிலைப்பாட்டை அறிய காத்திருக்க வேண்டும். அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். தேசிய கட்சியை உடனே சொல்லுங்கள் என நிர்பந்திக்க முடியாது. அவர்கள் நிறைய பேரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். எனவே அவர்கள் நிலைப்பாட்டை சொல்லும் போது சொல்லட்டும். ஒரு வேளை பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தால் எங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவோம். இல்லாவிட்டால் நாங்களும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை தனி சின்னத்திலாவது போட்டியிடுவோம் என்றார்.