தேர்தலை நேரில் சந்திக்க தகுதி இல்லாதவர்களுக்கு எதை பற்றியும் பேச அருகதை இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து இன்று ஈரோடு புறப்பட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.எஸ் அழகிரி கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்களுக்கு எதிரிகளே இல்லை. இந்த தேர்தலில் ஈவிகேஸ் இளங்கோவன் மகத்தான வெற்றியை அடைவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்புழக்கம் என்று பாரதிய ஜனதா கட்சி சொல்கிறது. அண்ணாமலை ஏதோ ரகசியத்தை கண்டுபிடித்ததை போல அமைச்சர் எவ வேலுவிற்கு சவால் விடுக்கிறார். பிறர் மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பாக தாங்கள் செய்த குற்றங்களை நினைக்க வேண்டும். கோவா மாநிலத்தில் என்ன நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் என்ன நடைபெற்றது. மகராஷ்டிராவில் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசாங்கத்தை எப்படி கவிழ்த்தீர்கள். இவை எல்லாமே பணத்தின் மூலம்தானே நடத்தப்பட்டது. முதலில் மகாராஷ்டிராவிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் என்ன நடந்தது என்பதற்கு பதில் சொல்லி விட்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரட்டும்.
அண்ணாமலை மிரட்டி பார்க்கும் அளவிற்கு அமைச்சர் எ.வ.வேலு செயல் திறன் இல்லாதவரா? ஒரு இடைத்தேர்தலில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற வியூகம் அமைக்க எவ வேலுவிற்கு தெரியாதா? தேர்தலை சந்திக்க தகுதி இல்லாதவர்களுக்கு எதைப் பற்றியும் பேச அருகதை இல்லை. பிரதமர் மோடியை பற்றிய ஆதராங்களுடன் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதற்கு பாரதிய ஜனதா தரப்பிலோ.. மோடியோ எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார்கள். அந்த வீடியோவில் புகார் கூறப்பட்டு இருப்பது பிரதமரைப்பற்றி. எனவே மத்திய அரசோ மோடியோ இதற்கு பதில் சொல்ல வேண்டும். அது அவர்களின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.