எங்கள் எய்ம்ஸ் எங்கே?: செங்கலை ஏந்தி எம்பி-க்கள் போராட்டம்!

மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படாததை கண்டித்து தமிழ்நாடு எம்பி-க்கள் “எங்கள் எய்ம்ஸ் எங்கே?” என்ற கோஷத்துடன் செங்கலை ஏந்தி நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நான்கு ஆண்டுகளுக்கு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டதால், தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் இதுவரை அடிக்கல் நாட்டிய சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஒற்றை செங்கலை கடந்து இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படாமல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2026ம் ஆண்டு நிறைவடையும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2026ல் பட்டம் பெற்று வெளியேறும் போது கூட அவர்கள் பயின்ற கல்லூரியை அவர்களால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் தொடர்பாக இதுவரை மத்திய அரசுக்கு 17 முறை அழுத்தம் கொடுக்கப்பட்டும், இதுவரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனிடையே சில நாட்களுக்கு முன்னதாக, மதுரை எய்ம்ஸ் எங்கே என்ற கேள்வியோடு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் சிபிஎம் சார்பாக வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. இதனைக் கண்டித்து நாடாளுமன்றம் வளாகத்திலேயே ஒற்றை செங்கலை கைகளில் ஏந்தி காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளின் எம்பி-க்கள் கண்டனம் தெரிவித்தனர். மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யாத நிதியமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த சு.வெங்கடேசன், மதுரை எய்ம்ஸ்-க்கு எங்கே என்று கோஷம் எழுப்பினார். இதுகுறித்து சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில், மதுரை எய்ம்ஸ்க்கு நிதியில்லை. செங்கல் ஏந்தி எம்பிக்கள் போராட்டம் என்று பதிவிட்டுள்ளார்.