இந்திய திருநாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் சிறப்பான பட்ஜெட். சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை சென்றார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து நிலையிலும், அனைத்து தரப்பிலும் இந்திய திருநாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் சிறப்பான பட்ஜெட்டாக இருக்கிறது. அந்த பட்ஜெட்டின் சாராம்சத்தை புரிந்து கொண்டு தமிழக அரசு அதை முறையாக பின்பற்ற வேண்டும். மத்திய அரசின் திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த பட்ஜெட் சிறப்பானதாக இருக்கிறது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னம் நிறுவுவது தொடர்பாக பல்வேறு தகவல்களை சேகரிக்க கேட்டிருக்கிறேன். பேனா சின்னம் நிறுவும் இடம் குறித்தும், சுற்றுப்புற ஆய்வாளர்கள் கருத்து, மீன்வளம் உள்ளிட்டவை குறித்தும் சில தகவல்களை கேட்டிருக்கிறேன். இதுபோல், மீனவர்களின் கருத்தையும், பல்வேறு மீனவ சங்கங்களின் கருத்துக்களையும் நேரடியாக கேட்டு அறிய இருக்கிறேன். அதன்பிறகு, அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என்பதை தெரிவிப்பேன்.
மதுரை எய்ம்ஸ் குறித்து, மத்திய பட்ஜெட்டின் விரிவான அறிக்கையில் பதில் இடம்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அ.தி.மு.க. வழக்கில் இடையீட்டு மனுவுக்கான பதில் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான வழக்கு நாளை (இன்று) வருகிறது. அ.தி.மு.க. சட்ட விதிப்படி நடந்த அமைப்பு ரீதியான தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டு 2026 வரை பதவிக்காலம் இருக்கிறது. அ.தி.மு.க. ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள், பா.ஜனதாவின் விருப்பமாக உள்ளது. அதுதான் எனது விருப்பமும்கூட. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். ஈரோடு இடைத்தேர்தலில் எங்களின் வேட்பாளருக்கு, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளதா? என ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேட்டபோது, “சசிகலாவை உறுதியாக சந்திப்பேன். அதற்கு முன்னதாக முறையான அறிவிப்பு உங்களுக்கு தெரிவிக்கப்படும்” என்றார்.