இலங்கை தமிழர் பிரச்சனை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் அண்ணாமலை சந்திப்பு!

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண அந்நாட்டின் 13-வது சட்டத் திருத்தத்தை உடனே நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கரை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிரது. அதிமுக- பாஜக கூட்டணியில் அதிமுகவின் இரு அணிகளுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதிமுகவின் ஓபிஎஸ் அணியோ, பாஜக வேட்பாளரை அறிவித்தால் வாபஸ் பெறுவோம் என்கிறது. அதிமுகவின் இபிஎஸ் அணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அகில இந்திய பாஜக தலைவர் ஜேபி நட்டாவை முதலில் சந்தித்தார் அண்ணாமலை. அப்போது தமிழ்நாட்டு அரசியல் நிலவரம், ஈரோடு கிழக்கு தொகுதி நிலைமை, அதிமுகவின் நிலைப்பாடுகள் குறித்து ஜேபி நட்டாவிடம் அண்ணாமலை விளக்கியதாக தெரிகிறது.

இதன்பின்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அண்ணாமலை தலைமையிலான பாஜக குழுவினர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர்கள் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணுதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இலங்கை தமிழர் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13-வது சட்ட திருத்தத்தை தாமதம் இல்லாமல் அந்நாட்டு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்; இதில் மத்திய அரசு தலையிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் மனு ஒன்றை தமிழ்நாடு பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் அண்ணாமலை வழங்கினார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடனான இந்த சந்திப்பின் போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மூத்த பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இலங்கை தமிழர் அரசியல் பிரச்சனையில் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் திடீரென மனு கொடுத்திருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.