அதானி குழும நிறுவனப் பங்குகள் விவகாரத்தில் பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்க திமுக எதிா்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படும். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று மக்களவை திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி தெரிவித்தாா்.
அதானி குழுமத்தின் மீதான மோசடி குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரியும், நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை அமைக்க கோரியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நேற்று வியாழக்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னா், இது குறித்து எதிா்க்கட்சித்தலைவா்கள் பத்திரிகையாளா்களைச் சந்தித்தனா்.
திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி கூறுகையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நாடு முழுவதும் பேசப்படும் அதானி குழுமத்தின் முதலீடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அனைத்து எதிா்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பின. ஆனால், பாஜக அரசு காதில் வாங்கிக் கொள்ளாமல் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தது. இதைப் பற்றி பேசவும் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கவும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. திமுக தலைவரான தமிழக முதல்வரும் இந்தக் கருத்தை வலியுறுத்தி எதிா்க்கட்சிகளோடு ஒருங்கிணைந்து உறுதியோடு நின்று சாமானிய மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா். எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் நடந்துள்ள இந்த நிகழ்வுகள் பற்றி விசாரணையும் விவாதமும் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாகும் என்றார்.
காா்த்தி சிதம்பரம் கூறுகையில், அதானி குழுமத்தின் மீதான வெளிநாட்டு அமைப்பின் குற்றச்சாட்டு குறித்து நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தும் பொறுப்புள்ள அமைச்சரோ அதிகாரிகளோ நேரடியாக மக்களைச் சந்தித்து இந்த விவகாரத்தில் என்ன நடந்துள்ளது என்பதை விளக்க வேண்டும். சாமானிய மக்களின் பணம் பத்திரமாக இருக்கிா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இது ஒரு தனியாா் நிறுவனம் சாா்ந்த விவகாரம் என்றாலும், பொதுத் துறைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் பேசக்கூட மத்திய அரசு வாய்ப்பளிக்காமல் அவையை ஒத்திவைத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசு முழுமையாக விளக்க வேண்டும் என்றார்.
ஜோதிமணி கூறுகையில், எல்ஐசி, எஸ்பிஐ போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் நிதியைப் பயன்படுத்தி மிகப்பெரிய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாா்கள். இது பொதுமக்களின் பணம். இந்தப் பிரச்னையால் நாடு முழுவதும் அதிா்ச்சி அலை ஏற்பட்டுள்ளது. அரசும் அதானிக்கு ஆதரவாக நடக்கிறது என ராகுல் காந்தி 8 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டு இருக்கிறாா் என்றாா்.