அதானி விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது: நிா்மலா சீதாராமன்

அதானி குழுமத்தின் பங்கு வெளியீட்டு நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டியது. அதன் காரணமாக பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்தன. பங்குச் சந்தையில் கூடுதல் பங்குகளை வெளியிட அதானி குழுமம் திட்டமிட்டிருந்த நிலையில், சந்தையின் நிலையற்ற சூழல் காரணமாக அந்த நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது. அதானி குழுமத்தில் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமெனவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டுமெனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் எழுப்பி வருகின்றன. அதனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் இரு நாள்களாக முடங்கின.

இந்நிலையில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மும்பையில் செய்தியாளா்களிடம் நேற்று கூறியதாவது:-

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளும் பொருளாதாரச் சூழலும் வலுவாக உள்ளன. அவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதானி குழும விவகாரம் குறித்து சுதந்திரமான நிதிசாா் அமைப்புகளான இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி), இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆகியவை ஆராயும். பங்குச் சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு செபிக்கே உள்ளது. பங்குச் சந்தை சாா்ந்த நடவடிக்கைகளை அந்த வாரியமே கண்காணிக்கும். இந்த விவகாரத்தில் ரிசா்வ் வங்கி ஏற்கெனவே தெளிவான விளக்கம் அளித்துவிட்டது. பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது இயல்பானதே. கடந்த இரு நாள்களில் மட்டும் சுமாா் 800 கோடி அமெரிக்க டாலா் மதிப்பிலான அந்நியச் செலாவணி இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்தின் வலிமையை வெளிக்காட்டுவதாக உள்ளது.

புதிய வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்துவதற்காக மட்டுமே மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. பழைய வரிவிதிப்பு முறையை ரத்து செய்வதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.