வாணியம்பாடி நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இலவச வேஷ்டி சேலையை வாங்குவதற்கான டோக்கனை வாங்க பெண்கள் திரண்ட போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் ஆண்டு தோறும் தைப்பூசம் தினத்தின் போது தொழில் அதிபர் 5 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்காக இலவச வேஷ்டி சேலை வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டும் நாளை(இன்று) தைப்பூசம் கொண்டாடப்பட உள்ள நிலையில், 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் இலவச வேஷ்டி சேலை வழங்குவதாக இருந்தது. இதற்கான டோக்கன் நேற்று வழங்கப்படுவதாக இருந்தது. ஜின்னாப்பாலம் அருகே உள்ள அந்த தொழில் அதிபருக்கு சொந்தமான இடத்தில்தான் இந்த டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இந்த டோக்கனை வாங்குவதற்காக வாணியம்பாடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஜின்னாப்பாலம் அருகே வந்து திரண்டனர். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு திரண்டதாக தெரிகிறது.

டோக்கன் வினியோகம் நடைபெற்று வந்த போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து உடனடியாக பொதுமக்கள் மயக்கமடைந்த 10 பெண்களையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 பெண்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் விசாரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பலியான 4 பெண்களும் வாணியம்பாடியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. பெண்களின் அடையாளம் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. 4 பெண்களின் உடல்களும் தற்போது வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் டி.எஸ்.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணைக்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், இவ்வளவு கூட்டம் கூடுவதால் முறையாக முன் அனுமதி பெறப்பட்டதா? என பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன. இதற்கிடையே இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தனியார் ஜல்லி நிறுவன உரிமையாளர் ஐயப்பன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.