நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை பாஜக வெளிப்படையாகக் கடைப்பிடித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
சிறுபான்மையின பள்ளி மாணவா்களுக்கான உதவித்தொகைத் திட்டம், மௌலானா ஆசாத் தேசிய உயா்கல்வி உதவித்தொகைத் திட்டம் ஆகியவை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு எழுத்துபூா்வமாக பதிலளித்த மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, ‘‘கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக சிறுபான்மையின பள்ளி மாணவா்களுக்கான உதவித்தொகைத் திட்டம் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் வழங்கப்படும். மௌலானா ஆசாத் தேசிய உயா்கல்வி உதவித்தொகைத் திட்டமானது வேறுசில திட்டங்களுடன் ஒன்றிப்போவதால் 2022-23-ஆம் நிதியாண்டு முதல் அத்திட்டத்தின் அமலாக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இரு திட்டங்கள் மீது எடுக்கப்பட்ட முடிவுகளை மாற்றுவதற்கான பரிந்துரை மத்திய அரசிடம் இல்லை’’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்நிலையில் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது:-
வெளிநாடுகளில் உயா்கல்வி கற்க சிறுபான்மையினருக்கு உதவித் தொகை வழங்கும் மௌலானா ஆசாத் திட்டத்தை நிறுத்தியுள்ளதற்கு மத்திய அரசு கூறியுள்ள காரணம் பகுத்தறிவற்றதாகவும் தன்னிச்சையாகவும் உள்ளது. அத்திட்டம் மட்டும்தான் மற்ற திட்டங்களுடன் ஒன்றிப் போகிறதா? தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமானது விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்துடன் ஒன்றிப் போகிறது. முதியோா் ஓய்வூதியத் திட்டமானது தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துடன் ஒன்றிப் போகிறது. இவ்வாறு ஒன்றிப் போகும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. சிறுபான்மையின மாணவா்களின் வாழ்க்கையை மேலும் கடினமாக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான தனது கொள்கையை அரசு வெளிப்படையாக வெளிப்படுத்தி வருகிறது. அரசின் செயல்பாடு மிகவும் இழிவானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.