காவிரி டெல்டா பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி பகுதியில் மழையால் சேதம் அடைந்த பயிர்களை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 10 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 லட்சம் ஏக்கரில் அறுவடை நடந்து உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர், நாகையில் 50 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறையில் 40 ஆயிரம் ஏக்கர், தஞ்சையில் 30 ஆயிரம் ஏக்கர் உள்ளிட்ட 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு மழையில் நனைந்து முளைக்கும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணமாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் நிர்ணயித்த செலவு தொகையின் அடிப்படையில் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னம் அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இது சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினை. இதை அனுமதித்தால் மற்ற கட்சியினர், கடலில் தங்களுக்கும் உரிமை உள்ளது என கூறி நினைவுச்சின்னங்களை நிறுவுவார்கள். இதற்கெல்லாம் முன்னுதாரணமாக, பேனா நினைவு சின்னம் அமைந்து விடும். எனவே பேனா சின்னத்தை கருணாநிதியின் நினைவிடத்திலேயே அமைக்கலாம். 2026-ம் ஆண்டு பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பது தான் எங்களுடைய இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.