வெறுப்புணர்வின் உச்சத்தில் பிபிசி ஆவணப்படத்தைத் தடை செய்துள்ளனர்: திருமாவளவன்

தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை விசிக தமிழில் மொழி பெயர்த்து நேற்று வெளியிட்டது.

கடந்த 2002இல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது.. இதன் காரணமாகக் குஜராத் மாநிலத்தில் அப்போது பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கலவரம் நாடு முழுக்க பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்தச் சூழலில் பிரபல சர்வதேச ஊடகமான பிபிசி குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக இந்த ஆவணப்படம் கடந்த வாரம் வெளியானது. இதில் சர்ச்சைக்குரிய மற்றும் உண்மைக்கு மாறான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆவணப்படத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தியாவில் இந்த ஆவணப்படத்தைத் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசு தடை பிரச்சார நோக்கில் இந்த படம் இருப்பதாகவும் உண்மைக்கு மாறான கருத்துகளைக் கொண்டிருப்பதாகவும் கூறி இந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும், யூடியூப் தளத்தில் இருந்தும் இந்தப் படம் நீக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் இந்தப் படத்தின் லிங்குகளை பலரும் ஷேர் செய்த நிலையில், அவையும் நீக்கப்பட்டன. இந்த ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஊடகவியலாளர் என் ராம் உள்ளிட்டோர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க எதிர்க்கட்சியினர் பலரும் இந்த ஆவணப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், நாடு முழுக்க இந்த ஆவணப்படத்தைத் திரையிடவும் முடிவு செய்துள்ளனர். முன்னதாக கேரளா உள்ளிட்ட பல காங்கிரஸ் கட்சியினர் தடை செய்யப்பட்ட இந்த ஆவணப்படத்தை பொது இடங்களில் திரையிட்டனர். சென்னை பல்கலைக்கழகம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் மாணவ அமைப்பினர் இந்தப் படத்தைத் தடையை மீறித் திரையிட்டனர். தமிழ்நாட்டிலும் இந்த ஆவணப்படத்தைத் திரையிடும் முயற்சியில் எதிர்க்கட்சியினர் இறங்கியுள்ளனர். DYFI அமைப்பு சென்னையில் இந்த ஆவணப்படம் பார்க்கும் போராட்டத்தை நடத்தியது. இதில் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெண் கவுன்சிலர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இதற்கிடையே இந்த ஆவணப்படத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அதன்படி நேற்றைய தினம் இந்த ஆவணப்படம் “இந்தியா: மோடி என்கிற கேள்வி” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. நேற்று சென்னை அம்பேத்கர் திடலில் “இந்தியா: மோடி என்கிற கேள்வி” என்ற பெயரில் பிபிசி ஆவணப்படத்தை தமிழில் வெளியிட்டார் திருமாவளவன். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இயக்குநர் வெற்றிமாறன், மார்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேந்த பாலசுந்தரம், பத்திரிகையாளர் ஆர்.கே. மார்க்சிஸ் கட்சியின் சாமுவேல் ராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வஹிதா நிஜாம், மனிதநேய மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் யாக்கூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆவணப்படத்தை வெளியிட்ட திருமாவளவன், வெறுப்புணர்வின் உச்சத்தில் இந்த ஆவணப்படத்தை தடை செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், குஜராத் வன்முறைக்கு யார் காரணம் என்பதை இந்த ஆவணப்படம் வெளிக் கொண்டு வருவதாகவும் இதன் காரணமாகவே இதைத் தடை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பேசிய அவர் கூறியதாவது:-

நாட்டில் வேறு எங்கும் மொழி வழி அரசியல் பெரிதாகப் பேசப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் அது வலுவாக உள்ளது. இதன் காரணமாகவே இங்குச் சனாதன அரசியல் வலுவாக உள்ளது. காதல், மதமாற்றம், புனிதப் பசு என்று அவர்கள் செய்யும் வன்முறைகளே பிரதமர் மோடியை வலுவாக்குகிறது. மதச்சார்பின்மைக்காகக் கொல்லப்பட்ட முதல் நபர் யார் என்றால் அது பிரதமர் மோடி தான். திமுகவையும் திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ்த் தேசியம் இல்லை. அது திரிபுவாதம். அது சனாதனத்திற்கே துணை போவதாக அமையும். மோடி என்ற தனிப்பட்ட நபர் வளர்ந்து நிற்பதாக நினைக்க வேண்டாம்.. சனாதன கோட்பாடு அவருக்குப் பின்னால் நிற்கிறது. வெறுப்புணர்வின் உச்சத்தில் பிபிசி ஆவணப்படத்தைத் தடை செய்துள்ளனர். குஜராத் கலவரத்திற்கு யார் காரணம் என்பதை இதில் விளக்கியுள்ளனர். எப்படி சிறுபான்மை வெறுப்பைத் தூண்டியுள்ளனர் என்பதை விளக்கியுள்ளனர். மோடி மீண்டும் பிரதமர் ஆனால், நாடு என்னவாகும் என்பதே கேள்வி. ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் சிலர் திட்டமிட்டு திமுக எதிர்ப்பு திராவிட கழக எதிர்ப்பை பேசி வருகிறார்கள். நம்முன் இருக்கும் பேசிய சவால் மோடி அரசியல்தான். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:-

ஒரு விமர்சனம் வருகிறது. அது நமக்கு ஏற்புடைய விமர்சனமோ.. அல்லது ஏற்பில்லாத விமர்சனமோ. ஒரு விமர்சனம் வருகிறது என்றால், அதை ஏற்றுக்கொள்வது ஜனநாயக போக்கு. ஜனநாயக அமைப்பு. அதை எதிர்ப்பது, நமக்கு எதிராக விமர்சனமே வரக்கூடாது என்பதும், எந்த ரூபத்தில் வந்தாலும் அந்த விமர்சனத்தை ஒடுக்குவது, குற்றவாளிகள் ஆக்குவது, அந்த விமர்சனத்தை முன் வைப்பவர்களை தேச விரோதிகள் ஆக்குவது பாசிசத்தின் உடைய அடையாளங்கள். இந்த ஆவணப்படத்தை நாம் பார்ப்பது என்பது பாசிசத்திற்கு எதிரான செயலாகவே நான் பார்க்கிறேன். இந்த ஆவணப்படத்தை நாம் பகிர்வதும் பாசிசத்திற்கு எதிரான செயல்பாடாக நான் பார்க்கிறேன். அதை தமிழில் நமக்கு கொடுத்து இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.