டெல்டாவில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்: ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் சேதமான நெற்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் பருவம் தவறி மழை பெய்தது. இந்த மழையால் பயிடப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் 22 சதவிகிதம் ஈரப்பதம் உள்ள நெற்பயிர்களை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்திடும் வகையில், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களை துரிதமாகத் தூர்வாருதல், மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடுதல், விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு வழங்குதல் போன்று தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் நெல் சாகுபடிப் பரப்பு அதிகரித்து, குறுவைப் பருவத்தில் 4.19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும், மாநிலத்தில் 16.43 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு, சம்பா/ நவரை பயிரின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில், துரதிஷ்டவசமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால், சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, அறுவடைப் பணியை மீண்டும் தொடங்கிடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் நிலையில், தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பத அளவு மிக அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் சக்கரபாணி, எம்ஆர்கே பன்னீர் செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில், சேதமடைந்த நெல் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சக்ரபாணி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஆய்வுக்கான அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் இன்று அளித்தனர். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிப்படைந்த நெல் குறித்த ஆய்வு செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், உணவுத்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனைக்கூட்டத்திற்குப் பிறகு மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவித்தார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிர் வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உளுந்து விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 8 கிலோ பயிறு விதைகள் 50% மானியத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, பின்வரும் நிவாரணத் தொகுப்பினை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,

* கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.

* கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்.

* நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.

* நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.

* கன மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.

* பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.