நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்தின் முறைகேடு தொடர்பாக விவாதிக்க கோரி நடந்த அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் குடியரசு தலைவர் உரை, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் என பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் 2023-24 தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதானி குழுமம் செய்த முறைகேடுகள் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இதனால் அவை முடங்கும் சூழல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இன்றைய தினமும் அப்படியான சூழலை தான் பார்க்க முடிந்தது.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரு அவைகளிலும் இன்று விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சாமானிய மக்கள் தங்கள் பணத்தை எஸ்.பி.ஐ வங்கி மற்றும் எல்.ஐ.சியில் முதலீடு செய்து வைத்துள்ளனர். இந்த இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமம் செய்த முறைகேடுகள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இது எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி ஆகியவை முதலீடு செய்த பணத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சந்திரசேகர் ராவ், பாரதிய ராஷ்டிர சமிதி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கேரளா காங்கிரஸ், ஜே.எம்.எம், ராஷ்டிரிய லோக் தள், ஆர்.எஸ்.பி, ஆம் ஆத்மி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ராஷ்டிரிய ஜனதா தள், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் அவையில் கூச்சலிட தொடங்கின. குறிப்பாக அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த அவை தனது வழக்கமான விவாதத்தை ஒத்தி வைத்து விட்டு அதானி குழும விவகாரம் பற்றி விவாதிக்க முன்வர வேண்டும். இதுபற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பங்குச்சந்தை சரிவு, அதானி குழும முறைகேடுகளால் நாட்டு மக்கள் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி பிரதமர் வெளிப்படையாக தெரிவிக்க சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதேபோல் மற்றொரு காங்கிரஸ் எம்.பி சையத் நாசர் ஹுசைனும் அதானி குழும விவகாரம் பற்றி விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இவ்வாறு எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.