துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
துருக்கி – சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டு உள்ளது. அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளமான டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். நிலநடுக்கத்தால் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என தெரிவித்து உள்ளார்.
சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்ப அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உதவியாக இந்தியா மீட்புப் படைகளை அனுப்பியுள்ளது. 100 பேர் கொண்ட மீட்புப் படை வீரர்கள் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களை இந்தியா துருக்கிக்கு அனுப்பியது.