ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய யோக குருவும், பிரபல தொழிலதிபருமான பாபா ராம்தேவ், மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியிருப்பதாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் கடந்த 2ம் தேதியன்று இந்து மத தலைவர்கள் பங்கேற்ற ஒரு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாபா ராம்தேவ் பங்கேற்றிருந்தார். அப்போது சிறப்புரையாற்றிய அவர் கூறியதாவது:-
இஸ்லாமியர்களிடம் உங்கள் மதம் என்ன சொல்கிறது என்று கேளுங்கள். ஐந்து முறை நமாஸ் செய்யுங்கள். பின்னர் மனதில் தோன்றுவதை செய்யுங்கள் என சொல்வதாக அவர்கள் கூறுவார்கள். இந்து பெண்களை கடத்தினாலும் சரி, எந்த பாவங்களை செய்தாலும் சரி ஆனால் நமாஸ் மட்டும் ஒரு நாளைக்கு 5 முறை செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் இஸ்லாமிய சகோதரர்கள் நிறைய பாவங்களை செய்கிறார்கள். அதே போல அவர்கள் நமாசும் செய்கிறார்கள். இப்படியாக அவர்கள் பயங்கரவாதிகளாகவும், குற்றவாளிகளாகவும் மாறுகிறார்கள். இஸ்லாமோ, குர்ஆனோ இதைதான் போதிக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இவைகள்தான் அவர்களால் பின்பற்றப்படுகிறது.
சரி இப்போது கிறிஸ்தவத்திற்கு வருவோம். கிறிஸ்தவம் என்ன சொல்கிறது? தேவாலயத்திற்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி கர்த்தராகிய யேசுவின் முன் நில்லுங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டுவிடும் என்று கூறுகிறது. இவர்கள் தங்களது கழுத்தில் சிலுவையை அணிந்துக்கொண்டு மதப் பிரசாரம் செய்து வருகின்றனர். நான் யாரையும் விமர்சிக்கவில்லை. சிலர் உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என்றும் வேறு சிலர் கிறிஸ்தவத்திற்கு மாற வேண்டும் என்பதில் வெறித்தனமாக இருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு மாற்றி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார். பின்னர் இந்து மதத்துடன் இரண்டு மதங்களையும் ஒப்பிட்டு பேசி, இந்து மதம் அகிம்சையையும், நேர்மையையும் போதிக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பத்தாய் கான் எனும் நபர் சவுஹாத்தான் காவல் நிலையத்தில், ‘மத வெறுப்பை தூண்டுவதாக’ பாபா ராம்தேவ் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஐபிசி பிரிவு 153A, 295A மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.