ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த அரசியல் தலைவர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுகிறார். தேமுதிக, நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே திமுகவும் காங்கிரஸ் கட்சியும் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக அத்தனை சக்திகளையும் இடைத்தேர்தல் களத்தில் இறக்கி விட்டுள்ளது.
இரட்டை இலை கிடைக்குமா? கிடைக்காதா என்ற பஞ்சாயத்து அதிமுகவில் நீடித்தது. ஒருவழியாக வேட்பாளர் யார் என்று உறுதியானதை அடுத்து இன்று அதிமுக பிரச்சார களத்தில் இறங்கியுள்ளது. வேட்பாளர் தென்னரசு இன்று காலை மணல்மேடு பகுதியில் பாலமுருகன் கோவிலில் வழிபாடு செய்தார். பின்னர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி எல்லைக்குட்பட்ட குபேர மூலையில் இருந்து தனது பிரச்சாரத்தையும் ஓட்டு சேகரிப்பையும் அதிமுகவினர் துவக்கியுள்ளனர்.
பின்னர் பத்து மணி அளவில் ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் உள்ள பணிமனைக்கு வந்த முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவினர் மற்றும் வேட்பாளர் தென்னரசு ஆகியோர் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். இதனை அடுத்து வேட்பு மனு தாக்கலில் அனைவரும் கவனம் செலுத்தினர்.
இன்று மதியம் 12:15 மணிக்கு ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய பலர் வந்திருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வேட்பாளர் தென்னரசு மற்றும் அவருடன் வந்த ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்பி செல்வகுமார் சின்னையன் , தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் ஆகியோரை மட்டும் உள்ளே அனுமதித்தனர். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் வேட்பாளர் தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவை சரிபார்த்த தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரிகளிடம் சரியாக இருக்கிறதா என பார்க்கும்படி உத்தரவிட்டார். இதனை அடுத்து வேட்பாளர் தென்னரசு மற்றும் உடன் வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.