இந்தியா முழுக்க ஒரே பெயர்தான், குரல்தான் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காஷ்மீர் தொடங்கி குமரி வரை அதானி பற்றிய பேச்சுதான் இருக்கிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசினார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 2 மற்றும் 3ம் இடத்தில் மாறி மாறி இருந்து வந்த அதானி தற்போது 17வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு $61.6 பில்லியனாக உள்ளது. இதில் பெரும்பாலான சொத்துக்கள் பங்குகள்தான் என்பதால் அவர் மேலும் சரிவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 130 பில்லியன் டாலருக்கு அதிகமான சொத்துக்களை வைத்து இருந்த அதானியின் பங்குகள் அப்படியே பாதியாக குறைந்துள்ளது. இது வரும் நாட்களில் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிண்டன்பர்க் இதுவரை பங்கு சந்தையில் செய்த சம்பவங்களில் இதுதான் மிகப்பெரிதாக பார்க்கப்படுகிறது. ஹிண்டன்பர்க் வெளியிட்ட 413 பக்க ஆய்வறிக்கையில், அதானி கடந்த மூன்றாண்டுகளாக மோசடியில் ஈடுபட்டதாகவும். கையில் பணமே இல்லாமல் எல்லாம் பொய்யான முதலீடுகள் மூலம் வரவு செலவு இருப்பதாக காட்டி ஏமாற்றி உள்ளது. தனது வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம் செய்துள்ளது என்று புகார்களை அதானி குழுமம் மீது இந்த ஹிண்டர்ன்பர்க் வைத்தது. இதனால் அதானி மீது சரமாரி புகார்கள் அடுக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற அவை தொடங்கியதும் அவையில் அதானி பங்கு சந்தை சரிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால், இரண்டு அவையும் முடங்கியது. ஹிண்டர்ன்பெர்க் வைத்த புகார்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. அமளிக்கு பின் அவையில் பேசிய ராகுல் காந்தி அதானி – மோடி இடையிலான நட்பு பற்றி பேசினார். முக்கியமாக அதானி – மோடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை காட்டி ராகுல் காந்தி பேசினார். ராகுல் காந்தி பேசியதாவது:-
இந்தியா முழுக்க ஒரே பெயர்தான், குரல்தான் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காஷ்மீர் தொடங்கி குமரி வரை அதானி பற்றிய பேச்சுதான் இருக்கிறது. துறைமுகங்கள், ஏர்போர்ட், சாலைகள் என்று எல்லா இடத்திலும் அதானிதான் இருக்கிறார். அவரை பற்றித்தான் பேச்சு நாடு முழுக்க இருக்கிறது. மோடிக்கும் அவருக்குமான உறவு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது தொடங்கியது. மோடியுடன் அந்த அதானி தோளோடு தோளாக நட்பாக இருந்தார். அவர் மோடியுடன் நெருக்கமாக இருந்தார். அதன்பின் 2014ல் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்தார். அப்போதுதான் மேஜிக் நடக்க தொடங்கியது.
தமிழ்நாடு, கேரளா, இமாச்சல பிரதேசம் என்று எல்லா இடங்களிலும் அந்த அதானியின் பெயர்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறது. அதானி எல்லா வேலையிலும் இருக்கிறாரே. எல்லா பிஸினஸிலும் அதானி இருக்கிறாரே என்றுதான் மக்கள் பேச தொடங்கி உள்ளனர். அதானி 8 – 10 துறைகளில் இருக்கிறார். அவரின் மொத்த மதிப்பு 8 பில்லியனாக 2014ல் இருந்தது. தற்போது அது 140 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது.
அவரின் பொருளாதாரம் உயரத்தை அடைந்து உள்ளது. அதானிக்காக விதிகளை கூட மாற்றி உள்ளனர். விமான நிலையங்களில் முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய வளர்ச்சியில் ஈடுபடக்கூடாது என்ற விதி உள்ளது. இந்த விதி அதானிக்காக பாஜக அரசால் மாற்றப்பட்டது. இந்த விதி மாற்றப்பட்டு, அதானிக்கு ஆறு விமான நிலையங்கள் வழங்கப்பட்டன. அவருக்காக இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் மிகவும் லாபகரமான விமான நிலையமான ‘மும்பை ஏர்போர்ட்’ கூட அதானிக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. சிபிஐ, இடி போன்ற அமைப்புகளை பயன்படுத்தி ஜிவிகேயிலிருந்து அதானிக்கு இந்த ஏர்போர்ட் கொடுக்கப்பட்டது.
அதானிக்கு பாதுகாப்பு துறையில் அனுபவம் இல்லை. அவருக்கு தற்போது பெரிய ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது. அதானி ஒருபோதும் ட்ரோன்களை உருவாக்கியது இல்லை. ஆனால் HAL மற்றும் இந்தியாவில் உள்ள மற்ற நிறுவனங்கள் அதைச் செய்கின்றன. அதையும் மீறி பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்று ட்ரோன் ஒப்பந்தத்தை அதானிக்காக மோடி பெற்று தந்துள்ளார். மோடி ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறார். மேஜிக் மாதிரி அதானிக்கு முதலீடு கிடைக்கிறது. அதானிக்கு எஸ்பிஐ 1 பில்லியன் டாலர் கடன் கொடுத்துள்ளது. அதேபோல் மோடி வங்கதேசம் செல்கிறார், உடனே வங்கதேசத்தில் அதானிக்கு என்று 25 வருட மின்சாரத் துறை ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில், இலங்கை மின்சார வாரியத் தலைவர் இலங்கையில் உள்ள நாடாளுமன்றக் குழுவில் வெளிப்படையாக அதானி பற்றி பேசினார். அதானிக்கு காற்றாலை மின்சாரத் திட்டத்தை வழங்குமாறு பிரதமர் மோடியால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அப்போதைய அதிபர் ராஜ்பக்சே தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை மின்சார வாரியத் தலைவர் தெரிவித்தார். இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக இருக்க கூடாது. இது அதானியின் கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால் இதை இந்தியாவின் கொள்கை போல காட்டி வருகிறார்கள். முன்பு அதானியின் விமானத்தில் பிரதமர் மோடி பயணித்தார். தற்போது மோடியின் விமானத்தில் அதானி பயணிக்கிறார். முன்பு குஜராத்தில் அவர் ஆதிக்கம் இருந்தது. இப்போது இந்தியா முழுக்க இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அதானி பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு பணம் கொடுத்தார்? என்று சொல்ல முடியுமா. இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அக்னீவீர் திட்டம் குறித்து பேசிய ராகுல் காந்தி, அக்னீவீர் திட்டம் என்பது ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு நமது இந்திய ராணுவத்தின் மீது திணிக்கும் ஒரு தேவையற்ற செயல் என மூத்த அதிகாரிகள் கூறுவதாக கூறினார்.