நூறு நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றி, அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்: ஜோதிமணி

நூறு நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றி, அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கரூர் எம் பி ஜோதிமணி நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய கரூர் மக்களவை தொகுதி எம்.பி ஜோதிமணி கூறியதாவது:-

வாக்குறுதிகள் கொடுப்பதில் நரேந்திர மோடி அரசு வல்லமை மிக்கது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா? என்று பார்க்க வேண்டிய நேரம் இது. இனியும் வாட்ஸ் அப் பாஸ்வேடுகளை நம்பி நாம் வாக்களிக்க முடியாது. அப்படி வாக்களித்ததன் பலனை நமது நாடு தற்போது வருந்தி அனுபவித்துக் கொண்டு இருக்கிறது. வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உள்பட அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அளித்தீர்கள். இதில் ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கீர்களா? இல்லை. வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் என்றால் இந்த நேரம் 18 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால், நாட்டில் 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பு இன்மை நிலவுகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உங்கள் நல்லாட்சியில் அதானிக்கு அள்ளிக் கொடுக்கும் வங்கிகள் கல்விக்கடனை கேட்டு இளைஞர்களின் வீடுகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்புகின்றன. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா.. வேலை வாய்ப்பு கிடைக்காத ஒருவர் கல்விக்கடனை அடைக்க பணத்திற்கு எங்கே போவார். தயவு செய்து கல்விக்கடனை தள்ளுபடி செய்யுங்கள்.

கரூர் இந்தியாவின் 4-வது பெரிய ஏற்றுமதி நகரம். விவசாயம், பேருந்து கட்டுமான தொழில், டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை உற்பத்தி, நிதி நிறுவனம் போன்றவை மக்களின் தொழிலாகும். இவற்றில் ஒன்று கூட நன்றாக இல்லை என வேதனடையுன் பதிவு செய்கிறேன். மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்தது. சிறு குறு நடுத்தர தொழில்கள் உச்சம் தொட்டன. விவசாயத்துறையின் வளர்ச்சி 4 சதவீதம். அதனால் வேலை வாய்ப்புகள் உருவானது. உலகின் 3-வது பொருளாதார நாடாக இந்தியாவை 5-வது இடத்திற்கு தள்ளிய பெருமை உங்களை சாரும். ஆனால், அந்த காங்கிரஸ் ஆட்சியை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் நீங்கள் இருண்ட காலம் என்று விமர்சிக்கிறீர்கள். உண்மையில் இருண்ட காலம் என்பது பாசிச பாஜக ஆட்சி காலம் தான் என்பதை இந்த நாடு அறியும்.

ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியை இருண்ட காலம் என்று சொல்ல முடியாது. சிலருக்கு பொற்காலமாக இருக்கிறது. அதானிக்கு இது பொற்காலமாக உள்ளது. பெருமுதலாளிக்கு இது பொற்காலம். வெறுப்பை விதைப்பவர்களுக்கு இது பொற்காலம். பட்ஜெட்டில் உணவு மானியத்தை 81,844 கோடி குறைத்துள்ளீர்கள். உலகளாவிய பசிக்குறியீட்டில் இந்தியா 107 வது இடத்தில் உள்ளது. தயவு செய்து உணவு மானியத்தில் கை வைக்காதீர்கள். ஏழைகளின் பசித்த வயிற்றில் அடிக்காதீர்கள். உணவு மானியத்தை குறைப்பது விவசாயத்தை பாதிக்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 2.8 சதவீதம். மருத்துவத்திற்கு 1.4 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உங்கள் புதிய கல்விக்கொள்கை 6 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் அதை வசதியாக மறந்து விட்டீர்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் முதலில் தூக்கி எறிவது இந்த புதிய கல்விக் கொள்கையாகத்தான் இருக்கும் என்பதை இங்கே அழுத்தமாக பதிவு செய்துகொள்கிறேன். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.