ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் பரிதாப நிலையில் இருக்கின்றனர்: லியோனி

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதாப நிலையில் இருக்கின்றனர் என்று திண்டுக்கல் லியோனி பேசினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் எதிர்க்கட்சியான அதிமுகவில் முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தேர்தல் நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. அமமுக வேட்பாளாரை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இதனால் இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவின் மூத்த அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பிரசாரத்தை தொடங்கியிருக்கின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரசாரம் மேற்கொண்டர். அப்போது திண்டுக்கல் லியோனி கூறியதாவது:-

அதிமுக என்ற கட்சியின் செயல்பாடு இன்று நீதிமன்றத்தில் தான் நடந்து கொண்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதாப நிலையில் இருக்கின்றனர். திமுகவை நோக்கி மெல்ல வரத்தொடங்கியிருக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒரு ஆட்சி திமுக ஆட்சியாகும். கடந்த அதிமுக ஆட்சியில் திட்டங்கள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. எங்கள் ஆட்சியில் கடந்த 21 மாதத்தில் தேர்தல் வாக்குறுதிகள் 60 சதவீதம் நிறைவேற்றியிருக்கிறோம். இலவச பஸ் பயணம், புதுமை பெண் உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. தந்தை பெரியார் பிறந்த ஈரோடு எப்போது திமுகவோடு தான் இருந்து வருகிறது. பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் சுயமரியாதை, தன்மானம் காக்க பிரசாரம் செய்தார். அந்த பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று நம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அவரை வெற்றி பெறச்செய்வது நம் அனைவரின் கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.