மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் லோக்சபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் திமுக எம்பிக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மத்திய அரசைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2019-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்னமும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்காக கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது மதுரை எய்ம்ஸ் விவகாரம் பெரும் பிரளயத்தை கிளப்பி இருந்தது. மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டப்பட்ட ஒற்றை செங்கல்லை வைத்து தற்போதைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பிரசாரம் செய்தார். 2021 சட்டசபை தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அந்த ஒற்றை செங்கல் பிரசாரம் திமுகவின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை செய்தது. ஆனாலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமானம் தொடர்பாக எந்த ஒரு முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையானது அடிக்கல் நாட்டப்பட்டு ஜரூராக கட்டி முடிக்கப்பட்டிருந்தால் நடப்பாண்டில் அது பயன்பாட்டுக்கு வந்திருக்கும். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைந்து முடிவதாக பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்த கருத்து சர்ச்சையானது. லோக்சபா, ராஜ்யசபாவிலும் தமிழக எம்பிக்கள் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் லோக்சபாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சுகாதாரப் பிரச்சனையை அரசியல் ஆக்க கூடாது என மன்சுக் மாண்டவியா கூறினார். மத்திய அரசின் இந்த பதிலில் அதிருப்தி அடைந்த திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.