எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

மூன்று செயற்கைக்கோள்கள் உடன் எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட்டை (SSLV D-2 Rocket) வெற்றிகரமாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

இஸ்ரோவின் இரண்டாவது முயற்சி வெற்றி அடைந்துள்ளது. எஸ்.எஸ்.எல்.வி டி2 என்ற ராக்கெட்டை இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தி மூன்று செயற்கைக்கோள்களையும் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் 1,000 கிலோ எடைக்கு அதிகமான எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பும் வகையில் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி போன்ற ராக்கெட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை அனுப்ப பிரத்யேகமாக ஒரு ராக்கெட்டை வடிவமைக்க முடிவு செய்தது. அதன் பலனாக உருவாக்கப்பட்டது தான் எஸ்.எஸ்.எல்.வி. இது 500 கிலோ எடை வரையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்ல உதவுகிறது. முதல் முயற்சியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த முயற்சி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் எஸ்.எஸ்.எல்.வி டி2 என்ற ராக்கெட் மூலம் தனது இரண்டாவது முயற்சியை இஸ்ரோ முன்னெடுத்தது. இதில் மூன்று செயற்கைக்கோள்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அவை, இ.ஓ.எஸ்-07, ஜனஸ்-1, ஆசாதி சாட்-2 ஆகியவை ஆகும். இதில் ஆசாதி சாட்-2 என்பது இந்தியாவை சேர்ந்த 750 பள்ளி மாணவிகள் இணைந்து உருவாக்கிய செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது. இ.ஓ.எஸ் என்பது பூமியை கண்காணிக்கும் திறன் கொண்டது. இந்நிலையில் ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது. திட்டமிட்டபடி காலை 9.18 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஒவ்வொரு படிநிலையாக விண்ணில் நகர்ந்து கொண்டே இருந்தது. விஞ்ஞானிகள் அனைவரும் ராக்கெட்டை செயல்பாட்டை உன்னிப்பாக கவனித்து கொண்டே இருந்தனர்.

இந்நிலையில் மூன்று செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

மூன்று செயற்கைக்கோள்களை வடிவமைத்து அதனை சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்த உதவிய விஞ்ஞானிகள் குழுவிற்கு வாழ்த்துகள். முன்னதாக எஸ்.எஸ்.எல்.வி டி-1 தோல்வியில் இருந்து என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்பது பற்றி விரிவாக ஆராய்ந்தோம். அதற்கேற்ப புதிய திட்டங்களை வகுத்து மிக விரைவாக அடுத்தகட்ட முயற்சியை முன்னெடுத்தோம். அடுத்தகட்டமாக ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் ஏவுதலுக்காக தயாராகி கொண்டிருக்கிறோம். ஒன் வெப் இந்தியா மூலம் 236 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளோம். இந்த ராக்கெட் வரும் மார்ச் மாதத்தின் மத்தியில் ஏவப்படும். இதையடுத்து மார்ச் மாத இறுதியில் பி.எஸ்.எல்.வி சி55 ராக்கெட் ஏவுதலுக்கு தயாராக இருக்கிறோம். இந்த திட்டம் NSILக்காக மேற்கொள்ளப்படுகிறது. மறுபுறம் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ராக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக சித்ரதுர்கா அருகில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து முயற்சிகளும் எடுபடும் பட்சத்தில் மாதிரி ஓட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.