திப்பு சுல்தானை நம்பும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளால் கர்நாடகத்துக்கு நல்லது செய்ய முடியாது என்று மத்திய மந்திரி அமித்ஷா கடுமையாக தாக்கி பேசினார்.
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பா.ஜனதா சார்பில் தேசிய தலைவர்களான பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா அடிக்கடி கர்நாடகம் வந்து பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடப்பாண்டில் 3-வது முறையாக மத்திய மந்திரி அமித்ஷா நேற்று கர்நாடகம் வந்தார். கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவுக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அவரை கட்சியின் மாநில தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் உள்ளிட்ட பா.ஜனதாவினா் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர், புத்தூர் தாலுகா ஈஸ்வரமங்களா அருகே ஹனுமகிரி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரதமாதா கோவிலை திறந்து வைத்து மலர்தூவி வணங்கினார். பின்னர் கூட்டுறவு வங்கியின் பொன்விழாவில் கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து கெஞ்சாரு பகுதியில் நடந்த தெருமுனை பிரசாரத்தில் பங்கேற்றார். அவருக்கு வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அங்கு நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்து அமித்ஷா பேசியதாவது:-
நல்லது செய்ய முடியாது சுல்தானை நம்பும் அவர்களால் கர்நாடகத்துக்கு நல்லது செய்ய முடியாது. நான் இங்கு வந்ததும் உங்களிடம் (மக்கள்) கேட்கிறேன். திப்பு சுல்தானை நம்பும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? அல்லது ராணி அப்பக்காவின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்யுங்கள். காங்கிரஸ் கட்சி ஊழல் நிறைந்தது. அந்த கட்சி கர்நாடகத்தை காந்தி குடும்பத்தின் ஏ.டி.எம்.மாக பயன்படுத்தியது. கர்நாடகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான தேசப்பக்தர்களின் பா.ஜனதாவா அல்லது காந்தி குடும்பத்திற்கு கர்நாடகத்தை ஏ.டி.எம்.மாக பயன்படுத்திய ஊழல் காங்கிரசா? என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 1,700 பேரை முந்தைய காங்கிரஸ் அரசு விடுவித்தது. தேச விரோத சக்திகளை திருப்திப்படுத்தும் இந்த காங்கிரசால் கர்நாடகத்தை பாதுகாக்க முடியாது. மோடி தலைமையிலான பா.ஜனதாவால் மட்டுமே கர்நாடகத்தை பாதுகாக்க முடியும். நாட்டில் பயங்கரவாதம், நக்சலைட்டுகளை ஒழித்து பிரதமர் மோடி நாட்டை பாதுகாப்பாக வைத்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபோது காங்கிரஸ் எதிர்த்தது. ராகுல்காந்தியும், காங்கிரசும் உன்னிப்பாக கேளுங்கள், இது மோடி அரசு. யாராலும் ஒரு கல்லை கூட வீச முடியாது. போர்க்களமாக இருந்த காஷ்மீரை பிரதமர் மோடி இந்தியாவின் கிரீடமாக மாற்றினார்.
ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிப்பது ஊழல் காங்கிரசுக்கு வாக்களிப்பது போன்றதாகும். ஆனால் பா.ஜனதாவுக்கு வாக்களித்தால், அது புதிய கர்நாடகத்தை உருவாக்குவது போன்றதாகும். காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் மாநிலத்துக்கு எந்த நன்மையும் செய்யாது. பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதெல்லாம் கர்நாடகம் முன்னேறியது. விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா எடுத்தார். எடியூரப்பா தலைமையில் பெங்களூரு முன்னேறியதால் ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை திரும்பி பார்த்தது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஹைட்ரஜன் மின் திட்டம், பிளாஸ்டிக் பூங்கா, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 1,000 மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி, மங்களூரு துறைமுகத்தை மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.