இட ஒதுக்கீட்டைப் பறிப்பதைத் தட்டிக் கேட்டால் ஆ.ராசா தேச துரோகி என்று சொல்லிவிடுவார்கள், ஆம், நான் தேசத் துரோகிதான். சாதியப் பட்டங்கள் போய் எல்லோரும் மனிதர் பட்டத்திற்கு வர போராடும்போது, அதை தேசத் துரோகம் என்று சொன்னால் அதை நான் சாகும் வரை செய்வேன் என திமுக எம்.பி ஆ.ராசா பேசியுள்ளார்.
கோவையில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ தனியரசு, ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பியிமான ஆ.ராசா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ஆ.ராசா பேசியதாவது:-
காங்கிரஸ் மட்டுமின்றி பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை புரிந்து கொள்ள மறுப்பவர்கள் உள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் முதல் இருண்ட காலமாக உள்ள இன்றைய சூழலில், கோவையில் இப்போது ஒளி ஏற்றப்பட்டு உள்ளது. 1800களில் துவங்கியது இட ஒதுக்கீடு. பிற்படுத்தப்பட்ட வகுப்பை அறிமுகப்படுத்தியது வெள்ளைக்காரர்கள். பின்தங்கியவர்கள் என்ற வார்த்தை கல்வி மறுக்கப்பட்டவர்களுக்காக கொண்டு வரப்பட்டதை, அம்பேத்கர் சமூகத்தில் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கானதாக மாற்றினார்.
இந்தியாவை ஆண்ட வெள்ளைக்காரர்களுக்கு மனிதாபிமானம் இருந்தது. வெள்ளைக்காரனை பெரியார் ஆதரித்ததற்கு காரணம் இருக்கிறது. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வியை வழங்க நினைத்தார்கள். பெரியார் சுதந்திரத்தை ஒப்புக்கொள்ளவில்லை. சுதந்திர நாள் துக்க நாள் என்றார். கல்வி 2000, 3000 ஆண்டுகளாக மறுக்கப்பட்டது. மறுக்கப்பட்ட கல்வியை நான் கேட்காமலேயே கொடுக்கும் மனம் வெள்ளைக்காரனுக்கு இருந்தது. ஆனால் கேட்காமலேயே எங்களது சொத்துகளை லாவகமாக நாடாளுமன்றத்தில் வைத்து திருடிச் செல்கிறீர்களே, நீங்கள் நல்லவனா? அவன் நல்லவனா? இதைக் கேட்டால் ராசா தேச துரோகி என்று சொல்லிவிடுவார்கள். ஆம் நான் தேச துரோகிதான். சாதியப் பட்டங்கள் போய் எல்லோரும் மனிதர் பட்டத்திற்கு வர போராடும்போது, அதை தேச துரோகம் என்றால் அதை நான் சாகும்வரை செய்வேன். எது தேச துரோகம்? 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது தேச துரோகம். எங்களுக்குத் தெரிந்தே 10% எடுக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் என்ன ஆக்ரோஷம் பிரதமருக்கு? பிரதமர் மோடி 140 கோடி மக்கள் எங்கள் பின்னால் இருக்கிறார்கள் எனச் சொன்னார். நான் சொல்கிறேன். எங்களுக்கு வாக்களித்தவர்களோடு சேர்த்து 40 கோடி பேர் எங்கள் பின்னால் உள்ளனர். நேற்று நாடாளுமன்றத்தில் பேசும்போது சொன்னேன். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் என ஐந்து, ஆறு திட்டங்கள் இருந்தது. ரூ. 1800 கோடி ஆண்டுக்கு கொடுத்து வந்த நிலையில், இந்த ஆண்டு அதற்கான நிதியை சத்தமே இல்லாமல் 600 கோடியாக குறைத்து விட்டனர். இது தொடர்பாக நான் கேட்டபோது, அதுக்கு செலவு செய்ய இடம் இல்லை என திமிராக பதில் கூறினர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பை தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே வைத்திருந்தவர்கள் வெள்ளைக்காரர்கள். வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கர், காந்தியை பார்த்து என்னை ரெஃபர் பண்ண நீ யார் என்று கேட்டார். அப்பறம் தான் தனித்தொகுதி கொடுத்தார்கள். கஷ்டப்பட்டு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டை 10% தெரியாமல் எடுத்துப் போகிறார்கள். சாதி ரீதியாக இட ஒதிக்கீடு கொடுக்க வேண்டாம் என்றார்கள். அப்போது அம்பேத்கர், யாரெல்லாம் சமூகத்தில் பின்தங்கி உள்ளார்களோ அவர்களை கவனித்துக் கொள்கிறேன் என்றார். ஒவ்வொரு மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியல் வெள்ளைக்காரர்களிடம் இருந்ததால் இட ஒதுக்கீடு எனக்கு எளிதாகிவிட்டது என்று அம்பேத்கர் சொன்னார்.
அம்பேத்கர், பெரியாரை படிக்காமல் இந்தியாவில் அரசியலில் வரக்கூடாது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கல்வி வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் என்ற அம்பேத்கர். இட ஒதுக்கீடு தான் இந்திய அரசியல். 200 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு போர் நடந்து வருகிறது. 70 ஆண்டுகளாகியும் 6% மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. 5.9% பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டை புரிந்துகொள்ள மண்டல் கமிஷனை படியுங்கள். பெரியாரை, அண்ணாவை, கருணாநிதியை படியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.