பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய யாழ்ப்பாண கலாச்சார மையம் திறப்பு!

இந்தியாவின் பொருளாதார உதவியுடன் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான யாழ்ப்பாண கலாச்சார மையத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மின்வலம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அங்கு யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை நேற்று திறந்து வைத்தார். இந்திய நிதி உதவியின் கீழ் அமைந்துள்ள இந்த கலாச்சார மையம் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை பிரதிபலிக்கிறது. தொடர்ந்து மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது திருக்குறள் புத்தகத்தை ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பரிசாக அவர் வழங்கினார். இந்த சந்திப்பின் போது இந்தியா – இலங்கை நல்லுறவு பற்றி பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

முன்னதாக யாழ்ப்பாண கலாச்சார மைய திறப்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது:-

யாழ்ப்பாண கலாசார மையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பரிசு ஆகும். அவருக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவிப்பதே நான் செய்யும் முதல் விடயம். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்களிடமிருந்து எமது சுதந்திரப் போராட்டத்துக்கு கிடைத்த ஒத்துழைப்புக்காகவே 75ஆவது சுதந்திர தினத்தை நாம் இம்முறை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானித்தோம். யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் ஆரம்பித்த இந்து மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தை தொடர்ந்தே ஹிக்கடுவே ஶ்ரீ சுமங்கள தேரர் பௌத்த மறுமலர்ச்சியை ஆரம்பித்தார். எனவே ஆறுமுக நாவலர் முன்னெடுத்த பணிகளில் இருந்து தான் எமது சிங்கள தலைமைத்துவமும் உருவாகியது. பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுக்கு நன்றி கூறும் வகையிலேயே வெசாக் தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையர்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் தலைவரே பொன்னம்பலம் இராமநாதன் ஆவார். இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த யாழ். கலாசார நிலையத்திற்கு, ”சரஸ்வதி மண்டபம்” என பெயரிடுகிறேன். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரத வரலாற்றை புதுப்பித்த நமது பாரத பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டிய இந்தியா – இலங்கை நாடுகளின் நல்லுறவை பிரதிபலிக்கும் “யாழ்ப்பாண கலாச்சார மையத்தை” (Jaffna Culture Center)திறந்து வைத்தேன். தெய்வப் புலவர் வள்ளுவர் கூறும் கல்வியின் சிறப்பையும், கற்றலின் மேன்மையையும் விளக்கி, நமது பிரதமர் மோடி வடமாகாணத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 100 மாணவர்களுக்கு புலமை பரிசில் திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கவிருப்பதையும் எடுத்துரைத்தேன். இந்நிகழ்வில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அமைச்சர்கள், கவுரவ வடமாகாண கவர்னர், மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்னும் வள்ளுவரின் வரிகளை மெய்ப்பிக்கும் விதமாக, பாரத பிரதமர் மோடி, அண்டைநாடு முதல் கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுக்கும் விதமாக நிதியுதவி அளித்து சீர்ப்படுத்தியுள்ளார். கலாச்சார உட்கட்டமைப்பையும் உறவுகளின் பிணைப்பையும் பிரதிபலிக்கும், ஒரு நல்லிணக்கத் திட்டமாக புதுமையாய் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தின் கலாச்சார மையம் அமையும். இந்தியாவின் பொருளாதார நிதி உதவியால் கட்டப்பட்ட இந்த கலாச்சார மையத்தில் 600 பேர் அமரக்கூடிய வகையில் நவீன திரையரங்கு வசதிகள் நிறைந்த அரங்கமானது 11 தளங்களுடன் அமைந்துள்ளது எனவும் அந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார்.

மேலும் இலங்கையின் வடக்கு எல்லையில் உள்ள பருத்தித்துறை துறைமுகத்தையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். பருத்தித்துறை துறைமுகம் உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மீன்பிடித்துறைமுகங்களை இந்திய ஆதரவுடன் நிர்மாணிப்பதற்காக கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தது. அத்துடன் இந்தியா – இலங்கை இடையிலான கப்பல் சேவைகள் தொடங்கப்பட இருக்கும் தலைமன்னார் பகுதிக்கும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பயணம் மேற்கொண்டிருந்தார். மன்னாரில் 150 குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் அவர் வழங்கினார்.