ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் சமூக நல்லிணக்க சூழலை பாதுகாத்திட இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில், கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி (02.10.2022) அன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி மறுக்கவே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கு விசாரணை முடிவில் பல நிபந்தனைகளை விதித்து ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல்துறை இந்த உத்தரவை செயல்படுத்தாத நிலையில் இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் தமிழக காவல்துறையின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டார். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்க மறுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு மேல்முறையீடு வழக்கினை தாக்கல் செய்தது.
மேல்முறையீட்டு வழக்கினை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பேரணி நடத்த அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அரசியல் சாசன அடிப்படையில் மக்களின் அடிப்படை பேச்சுரிமை, எழுத்துரிமையை அரசியல் தத்துவார்த்த காரணங்களைக் கொண்டு பறிக்கக் கூடாது என்ற நீதிபதிகளின் கருத்து வரவேற்கத்தக்கதாகும். இதனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு இதை அப்படியே பொருத்துவது ஏற்புடையதா என்பதே கேள்வி. ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னை ஒரு கலாச்சார அமைப்பாக காட்டிக்கொண்ட போதிலும் அரசியல் சாசனத்தின் விழுமியங்களுக்கு விரோதமாக மதச்சார்பின்மைக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், மதவெறிப் பிரச்சாரம் மற்றும் கலவரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது நாடறிந்த உண்மையாகும்.
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், கூட்டாட்சி கோட்பாடுகளுக்கும் எதிரான கொள்கை திட்டங்களை உருவாக்கியவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் குருவான கோல்வால்கர் என்பதும் அறிந்ததே. அக்கொள்கை கோட்பாட்டின் கீழ் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அமைப்பே ஆர்எஸ்எஸ். மேலும், தமிழ்நாட்டில் நடைபெற்ற பல மதமோதல்கள், மதக்கலவரங்களுக்கு பின்புலமாக திகழ்ந்ததோடு, விநாயகர் சதுர்த்தி போன்ற ஆன்மீக விழாக்களை மத மோதலாக உருவாக்குவது போன்றவைகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
காவல்துறையின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பதில் அறிக்கையில், பேரணி நடத்த அனுமதி கோரியுள்ள வழித்தடங்களில் பல இடங்களில் இஸ்லாமிய குடியிருப்புகளும், மசூதிகளும் இருப்பது பதட்டத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மேற்கண்ட பின்புலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி, பொது அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் கொண்டுள்ள தமிழ்நாட்டில் மத அடிப்படையிலான பதட்டத்தை உருவாக்குவதற்கு வழிகோல வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு இவ்வுத்தரவை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.