ஆளுநர்கள் நியமனம் அரசியல் நியமனமாக மாறியுள்ளது: டி.ராஜா!

ஆளுநர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறியுள்ளதாகவும், பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆளுநராக நியமிக்கப்படுவதாகவும் சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா விமர்சித்துள்ளார்.

கோவையில் வடகோவை குஜராத் சமாஜ் கூட்டரங்கில் மாவட்ட பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியதாவது:-

நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைகள், நாடாளுமன்றம் செயல்படும் விதம் மிகுந்த கவலை அளிக்கிறது. நாடாளுமன்ற பட்ஜெட்டை ஆழமாக ஆய்வு செய்து பார்த்தபோது இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்டாகவும், செல்வந்தர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் பட்ஜெட்டாகவும் இருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது. ஏழை மக்களின் வாழ்வாதார நிலை உயர ஒதுக்கீடு இல்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெற்று வருகின்றன. அதானி ஊழல் மக்களிடம் பேசுபொருளாக மாறி உள்ளது. இதற்கு பிரதமர், நிதி அமைச்சர் தான் பொறுப்பு. அதானி பெயரை சொல்லி விவாதம் நடத்த நாடாளுமன்றத்தில் அனுமதிப்பதில்லை. அதானி ஊழல் சாதாரண ஊழல் இல்லை. எல்ஐசி மற்றும் எஸ்பிஐயில் பெருமளவு நிதி பெற்று மோசடி செய்துள்ளது மக்கள் பணம். கடந்த காலங்களில் ஊழல் பெரிதளவில் பேசப்பட்டபோது நிதி அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். தற்போது மவுனம் சாதிக்கின்றனர்.

மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்றன. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாஜக அரசை அகற்ற வேண்டும். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும். இதற்கு மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆளுநர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி உள்ளது. தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒன்றும் புதியதல்ல. முன்னதாக இல.கணேசன், தமிழிசை செளந்தரராஜன் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆளுநர்களாக தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். பாஜக நியமிக்கும் ஆளுநர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.