காஷ்மீர் மக்கள் கேட்டது வேலைவாய்ப்பு. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது, பா.ஜனதாவின் புல்டோசர் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
காஷ்மீரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால், ஆக்கிரமிப்பு நிலங்களில் வசிக்கும் மக்கள், வீடுகளை இழந்து தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆக்கிரமிப்பு அகற்றுவதை உடனே நிறுத்துமாறு வலியுறுத்தி உள்ளன.
இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இதுதொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காஷ்மீர் மக்கள் விரும்புவது வேலைவாய்ப்பு, சிறப்பான வர்த்தக சூழ்நிலை, அன்பு ஆகியவைதான். ஆனால் அவர்களுக்கு என்ன கிடைத்தது? பா.ஜனதாவின் புல்டோசர். பல ஆண்டுகளாக மக்கள் பாடுபட்டு வளர்த்த நிலம், அவர்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது. அமைதியையும், காஷ்மீரையும் மக்களை ஒன்றுபடுத்தித்தான் பாதுகாக்க வேண்டுமே தவிர, மக்களை பிரித்து பாதுகாக்க நினைக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.