தீண்டாமைக்கு அடிப்படையே ஆர்எஸ்எஸ்-பாஜக தான்: கே.எஸ் அழகிரி

ஆளுநர் மரபுகளை தாண்டி சொல்கிறார். எதை வேண்டும் என்றாலும் பேசலாம் என ஆளுநர் நினைக்கிறார் என்று கே.எஸ் அழகிரி கடுமையாக சாடினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘பிரதமர் மோடியும் அம்பேத்கரும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் சமூகநீதி குறித்து நிறைய பேசுகிறோம், ஆனால் செயல்பாடு அதற்கு ஏற்றதாக இருப்பதில்லை. தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நாம் என்ன செய்திருக்கிறோம்? என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியதாவது:-

அரசியல் கருதுக்களை பிரதமர் மோடி சொல்லட்டும். ஜேபி நட்டா சொல்லட்டும். அண்ணாமலை சொல்லட்டும். அதற்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் ஒரு ஆளுநர் எப்படி சொல்லலாம். ஆளுநர் மரபுகளை தாண்டி சொல்கிறார். எதை வேண்டும் என்றாலும் பேசலாம் என ஆளுநர் நினைக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

அப்போது தமிழ்நாடு ஆளுநர் தீண்டாமை குறித்து பேசியது தொடர்பாக கேஎஸ். அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த கே.எஸ் அழகிரி கூறியதாவது:- இந்தியாவில் தீண்டாமை உள்ளது. தீண்டாமை என்பது எல்லா கிராமங்களிலும் இருக்கிறது. ஆனால், இந்த தீண்டாமையை அகற்றுவதற்காக.. அறவே ஒழிப்பதற்காக நாம் எடுத்திருக்கும் முயற்சிகள் தான் இதில் முக்கியம். தீண்டாமை ஒரு குற்றம் என்று சட்டத்தில் மட்டும் சொல்லவிலை. காந்தி உளப்பூர்வமாக சொன்னார். தமிழகத்தில் முற்போக்கு கட்சிகள் ஒருபோதும் தீண்டாமையை ஆதரித்தது இல்லை.

தீண்டாமைக்கு எதிராக இந்த அரசு உள்ளது. தீண்டாமைக்கு எதிராக எங்கள் கூட்டணி உள்ளது. காவல்துறை உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்றங்கள் நடைபெறுகிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை. மூடி மறைக்கவில்லை. உத்தரபிரதேசம் எப்படி இருக்கிறது.. உங்களுடைய பிற மாநிலங்கள் எப்படி இருக்கிறது.. தமிழகம் எப்படி இருக்கிறது என்பது பற்றி நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து முதல்வர்களும் தீண்டாமைக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். வேறு வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் முதல்வராக இருந்து இருக்கிறார்கள்.

தீண்டாமைக்கு அடிப்படையே ஆர்.எஸ்.ஏஸும் பாஜகவும் தான். தீண்டாமையை கட்டி வளர்க்கிறவர்களும் நீங்கள்தான். தீண்டாமையை நியாயப்படுத்துகின்றனர். அதை அவர்களால் மறுக்க முடியுமா. சனாதனம் என்றால் என்ன.. பழைமையை நிலைநாட்டுவதற்கு பெயர்தானே சனாதனம். தீண்டாமையை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் என்றைக்கு வெளியே வந்துள்ளது. இந்து மதத்தின் தலைவராக ஒரு தீண்டத்தகாதவரை உங்களால் நியமிக்க முடியுமா? சங்கராச்சாரியர் இடத்தில் ஒரு தலித் அமர முடியுமா? அதற்காக ஆர்.எஸ்.எஸ் பிரசாரம் செய்யுமா?. இவ்வாறு அவர் கூறினார்.