ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தின் அனல் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வரும் சூழலில், மொத்தமாக 77 பேர் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணி தரப்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஏராளமானோர் தெரு தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செந்தில் பாலாஜி கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் 90 சதவிகித மக்கள், தங்கள் வாக்கு கை சின்னத்திற்கு என்று உறுதி செய்திருக்கிறார்கள். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சாதனைகளே காரணமாக இருக்கிறது. நிச்சயமாக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெறுவார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்கள் பற்றிய கேள்விக்கு, தொலைக்காட்சியும், பத்திரிகைகளுமே எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இருப்பது போல் காட்டுகின்றன. அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கூட பெரியளவில் ஆட்களே இல்லை. அதிமுக கட்சிக்குள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே யாருக்கு அதிக செல்வாக்கு என்பது மட்டுமே போட்டியாக இருக்கிறது. அதிமுக 4 அணிகளாக பிரிந்து கிடக்கிறது என்று தெரிவித்தார்.
பின்னர் சொத்து வரி, மின் கட்டண உயர்வு பற்றிய விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எடப்பாடி பழனிசாமியால் ஏன் போராட்டம் நடத்த முடியவில்லை. சொத்து வரி, மின் கட்டண உயர்வு பற்றி மேடையில் பேசும் எடப்பாடி பழனிசாமி, மற்ற விலைவாசி உயர்வு பற்றியும் பேசி இருந்தால் அவர் மக்களுக்கான கட்சி நடத்தி வருகிறார் என்று எண்ணலாம். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி என்பது மக்கள் நலனுக்கான கூட்டணியல்ல என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுக எதிர்காலம் பற்றிய கேள்விக்கு, கைலாசா நாடு என்று சொல்வார்கள். அந்த மாதிரி ஏதாவது ஒரு புதிய பகுதிக்கு சென்றால் ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன் என்று ஆளுக்கொரு பகுதியாக பிரித்து கொண்டு முயற்சி செய்யலாம். அதிமுக என்ற கப்பலில் ஓட்டை விழுந்து கடலில் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாருங்கள். வாக்கு எண்ணிக்கையின் போது தெரியும் என்று தெரிவித்தார்.
அண்ணாமலை பற்றிய கேள்விக்கு, பாஜகவில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எத்தனை பூத்களுக்கு பூத் கமிட்டி அமைத்திருக்கிறார்கள். திமுகவில் ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நோட்டாவுடன் போட்டிபோடுவோர் எல்லாம் ஆட்சியமைப்போம் என்று பேசுகிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருப்பதால், தமிழ்நாட்டில் நாட்டாமை செய்திட முடியாது. இங்கே பாஜகவின் செல்வாக்கு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். பாஜக பற்றி மக்களின் எண்ணம் என்பதும் அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. மின் இணைப்பை ஆதாருடன் இணைத்ததில் எந்தவித குளறுபடியும் இல்லை. தமிழகத்தில் 2 கோடியே 30 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 12 லட்சம் இணைப்புகளையும், ஆதாருடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாகவும், கைத்தறிக்கு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் இதுகுறித்த அரசாணை வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.