பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்தும் சோதனையானது ஒரு மிரட்டும் செயல் என்று விமரிசித்துள்ள காங்கிரஸ் கட்சி, விமரிசனங்களுக்கு மத்திய அரசு பயப்படுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கர மதக்கலவரம் குறித்து பிபிசி தொலைக்காட்சி அண்மையில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இருப்பினும், இந்த ஆவணப்படம் பிரசார நோக்கில் உள்ளதாகவும் பொய்யான தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறி மத்திய அரசு இந்த ஆவணப்படத்தைத் தடை செய்தது. இந்த தடையை மீறிப் பல கட்சிகளும், கல்வி நிறுவனங்களும் இந்த படத்தைத் திரையிட்டு வருகின்றன. அவர்கள் மீது கைது நடவடிக்கைகளும் பாய்கின்றன.
இந்நிலையில், டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரி விவகாரம் குறித்து சில சந்தேகங்கள் இருப்பதாகவும் இதன் காரணமாகவே இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது, மோடி தலைமையிலான மத்திய அரசு விமர்சனங்களைக் கண்டு பயப்படுவதைத்தான் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். மிரட்டும் வகையில் மத்திய அரசு செயல்படும் விதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த ஜனநாயகமற்ற மற்றும் சர்வாதிகாரப் போக்கை இனியும் தொடர முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசோ பிபிசிக்கு பின்னால் சென்று கொண்டிருக்கிறது. ஒருவருக்கு அழிவு வந்துவிட்டால் அவரால் புத்திசாலித்தனமாகச் செயல்பட முடியாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். பிபிசியில் நடைபெறும் வருமான வரி சர்வே முழுக்க முழுக்க பாஜகவின் விரக்தியையே வெளிப்படுத்துகிறது. மேலும், விமர்சனங்களுக்கு மோடி எப்படி அஞ்சுகிறார் என்பதையும் இது தோலுரித்துக் காட்டுகிறது” என்றார்.
இந்த விவகாரம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு அரசாங்கத்துக்கு அழகே அது அச்சமில்லாமல் இருப்பதுதான். ஆனால், என்றைக்கு ஒரு அரசாங்கம் அச்சம் மற்றும் அடக்குமுறையின் சின்னமாக மாறுகிறதோ அன்றைக்கே அதன் முடிவு நெருங்கிவிட்டதாக அர்த்தம். அந்த வகையில், பிபிசி மீதான சர்வே நடவடிக்கையின் மூலம் மத்திய பாஜக அரசின் முடிவு நெருங்கிவிட்டதாக நாம் புரிந்துகொள்ளலாம்” என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதேபோல, பிபிசி சர்வே விவகாரத்தை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை விமர்சித்துள்ளன. இந்நிலையில், இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் கெளரவ் பாத்தியா கூறுகையில், ஒரு நிறுவனம் இந்தியாவில் செயல்படுகிறது என்றால், அது இந்தியச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். சட்டத்தை மதித்து நடந்தால் நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்? வருமான வரித்துறை தனது பணியைச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். உலகிலேயே மிக மோசமான ஊழல் நிறுவனமான பிபிசி திகழ்கிறது. காங்கிரஸின் கொள்கையுடன் பிபிசி கொள்கை அப்படியே ஒத்துப்போகிறது எனக் கவுதம் பாத்தியா கூறினார்.