அரசு துறை செயலாளர்கள் செயல் வீரர்களாக செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொடர்ச்சியான ஆய்வுகளே தொய்வில்லாத நிர்வாகத்தை உருவாக்கும் என்றும், செயல் வீரர்களாக அரசு துறை செயலாளர்கள் செயல்பட வேண்டும் என்றும் ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்திவரும் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான முதலாவது ஆய்வு கூட்டம் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் 13 துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை தலைமைச்செயலகம், கூட்ட அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திட்டங்கள் தொடர்பான 2-வது ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் எரிசக்தி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள், போக்குவரத்து, சிறப்பு முயற்சிகள், பொதுப்பணி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள், நீர்வளம் மற்றும் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு ஆகிய 14 துறைகளைச் சார்ந்த நடைமுறையில் உள்ள 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், 6 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு கூட்டத்தின் இறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திட்டங்கள் தொடர்பான 2-வது ஆய்வு கூட்டத்தினைத் தற்போது முடித்துள்ளோம். ஒவ்வொரு செயலரும், தங்களது துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் பணி முன்னேற்ற நிலை குறித்து விளக்கமாக தெரிவித்திருக்கிறீர்கள். பணிகள் முடிவுறும் காலம் குறித்தும் குறிப்பான உறுதிமொழிகளை அளித்திருக்கிறீர்கள். அவற்றையெல்லாம் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. இந்த திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் நிலையில் ஏன் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றால், அதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதலாவது, இவை அரசின் முன்னுரிமை திட்டங்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் பெருமையை மேலும் உயர்த்திடும் திட்டங்களாகும். இவற்றில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும், தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆய்வு கூட்டத்தை நாம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

இரண்டாவதாக, முக்கிய துறைகளைச் சார்ந்த செயலாளர்களாகிய நீங்கள் அனைவரும், அரசின் பெருந்திட்டங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். ஒரு திட்டத்தின் செயலாக்கத்திற்கு, மற்றொரு துறை தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்கி, தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்து, முன்னேறிச்செல்ல பாதை வகுக்க வேண்டும். அதற்கு உங்களின் முழு ஒருங்கிணைந்த பங்களிப்பு தேவை. அதற்காகவும்தான் இந்த ஆய்வு கூட்டம். அரசு நிர்வாகம் என்பது, நாம் அனைவரும் சேர்ந்திழுக்கும் தேராகும்; அதை விரைவாகச் செய்தால், நிர்வாகம் நேராகும். தேர் நிலையிலேயே இருப்பதற்காக செய்யப்பட்டதல்ல திட்டங்கள், காகிதத்தில் இருப்பதற்காக வரையப்பட்டதல்ல. ஆகவே, ‘செயல் செயல் செயல்’ என செயல்வீரர்களாக நீங்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சார்நிலை அலுவலர்களது பணிகளை நீங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யுங்கள். தொடர்ச்சியான ஆய்வுகளே, தொய்வில்லாத நிர்வாகத்தை உருவாக்கும். உழவர் சந்தை திட்டம் புறக்கணிப்பு சாதாரண நன்மை அளிக்கும் திட்டங்களைக்கூட முழுமையாக, குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்தும் போது அது முழு நன்மையை ஏற்படுத்தி விடும். பெரிய நன்மை அளிக்கும் திட்டங்களை அரைகுறையாக செயல்படுத்தும் போது சிறு நன்மைகூட விளையாமல் போய்விடுவதும் உண்டு. இதற்கு ஒரேயொரு உதாரணம்- கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்ட உழவர் சந்தைகள். இவை அனைத்துமே நிர்வாகத்தின் கையில் அதாவது, உங்கள் கையில் தான் இருக்கிறது. அதனால்தான் பொதுவாக, திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்று சொல்வார்கள். அதிகாரிகள் கவனித்து பேணிக்காத்தால், அவை வளரும். அதிகாரிகள் கவனிக்கத்தவறினால், அவை மெலியும். ஆனால், நமது மாநிலத்தில், பல துறைகளில், பல திட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

திட்டங்களை வகுக்கவும், நிறைவேற்ற வழிமுறைகளைச் சொல்லவும் துறைசாரா வல்லுநர் குழுவை நாங்கள் அமைத்திருக்கிறோம். அவர்களது ஆலோசனைகளை முழுமையாக பெறுங்கள். அவற்றைச் செயல்படுத்துங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் 2 மாதங்கள் கழித்து, இதேபோன்ற ஆய்வு கூட்டத்தில் உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.