பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்தத் தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், 2009ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்படவில்லை. தற்போதும் உயிருடன் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் விரைவில் வெளியே வருவார். அவர் அனுமதியுடனேயே இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று தெரிவித்தார். மேலும் சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்தத் தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை. பழ.நெடுமாறன் கூறியபடி பிரபாகரன் நலனுடன் இருந்தால், அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சித்தரக் கூடியது ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தார்.