கரூர் மாவட்டத்தில் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவிகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள சென்றனர். அந்த விளையாட்டு போட்டிகள் முடிவடைந்தவுடன் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மாயனூர் கதவணையை பார்க்க விரும்பினர். இதையடுத்து மாணவிகள் அங்கு சென்று அணையின் அழகை ரசித்தனர். மேலும் அங்கிருந்த செல்லாண்டியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து ஒரு மாணவி காவிரி ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு சுழல் இருந்ததை அறியாததால் அவர் நீரில் மூழ்கினார். இவரை பார்த்த மேலும் 3 மாணவிகள் அவரை காப்பாற்ற ஆற்றில் இறங்கினர். அப்போது அவர்களும் நீரில் மூழ்கினர். இது குறித்து மற்ற மாணவிகள் கூச்சல் போட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து மாணவிகளை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும் அவர்களால் முடியவில்லை.
இதையடுத்து கரூர், முசிறி ஆகிய பகுதிகளிலிருந்து 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து ஆற்றில் தேடினர். அப்போது 4 மாணவிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் 17 வயதுக்குள்பட்ட மாணவிகள். தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் இறந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த காவிரி ஆற்று பகுதி ஆழமான பகுதி என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். சுழல் இருப்பதும் தொடர்பாகவும் ஆழம் அதிகம் என்றும் அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. எனினும் அதை மாணவிகள் கவனிக்காமல் இறங்கினரா என தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.