தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்யும் விதமாக நான் பணியாற்ற அனைவரின் அன்பும் பிரார்த்தனையும் தேவை என்று சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 18ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சிபி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்கவுள்ளார். இதையடுத்து இன்று பாஜக கட்சி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் சிபி.ராதாகிருஷ்ணன். முன்னதாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று உருக்கமாகப் பேசியுள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள முன்னாள் பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னை தியாகராய நகர் பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
பாஜக தொண்டன் எனும் நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சியாக, அடுத்த நிலைக்கு செல்கின்றேன். இல.கணேசன், தமிழிசை சௌந்தரராஜன், சி.பி. ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கட்சிப்பணியை விட்டுச் செல்கின்றனரே என பலரும் கேட்கின்றனர். ஆனாலும் நாங்கள் சென்றாலும் தமிழ்நாடு பாஜக மகத்தான இயக்கமாக தனது பயணத்தை தொடர்ந்து புதிய சிகரங்களைத் தொடும். அண்ணாமலையின் தலைமை அப்படிப்பட்டதாக இருக்கிறது.
தூத்துக்குடியில் நான் படித்தபோது அப்பா எனக்கு அனுப்பிய மணி ஆர்டர் பணத்தை, மீண்டும் திருப்பூருக்கு அனுப்பி வைத்து கட்சிக்கு செலவிட்டேன். மயிலாப்பூர் தொகுதியை கூட்டணியில் கருணாநிதி பாஜகவிற்கு தந்தார். இப்போதுபோல் அப்போது திமுக தன் கூட்டணிக் கட்சிகளுக்கு 25 கோடிக்கு காசோலை எல்லாம் தரவில்லை. பாஜக தொண்டர்கள் பி.எஃப் பணத்தில் லோன் எடுத்துச் செலவிட்டனர். எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்றும் தொண்டர்களின் இயக்கம் பாஜக. இல.கணேசன், கிருபாநிதி, எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது, திருநாவுக்கரசர், கா.சே.ராமசந்திரன், காசி முத்துமாணிக்கம் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதை எல்லாம் மறக்க முடியாது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.. என்பார்கள். மாற்று இயக்கத்திற்கு சென்றாலும் அவர்களை மாறு கண் கொண்டு பார்க்க கூடாது. நேர்கொண்ட பார்வை மாறாமல் இருந்தால்தான் இயக்கம் மகத்தான வெற்றி பெறும்.
அரசியல் என்பது ஒருநாள் நிகழ்வு அல்ல, அது ஒரு நீண்ட பயணம். ஜெயலலிதாவை பார்த்து வியக்க காரணம் நாம் சொல்வதை அவர் நொடியில் கிரகித்துக் கொள்வார். மிகப்பெரும் தோல்வியை முந்தைய நாள் இரவில் கேட்டாலும், மறுநாள் காலை முரசொலியில் கருணாநிதி உத்வேகத்தோடு எழுதுவார். மாற்று சிந்தனை கொண்டோருக்கும் முக்கியத்துவம் தரச் சொன்னவர் வாஜ்பாய். கி.வீரமணி மாற்று சிந்தனை கொண்டவராக இருந்தாலும், ஒரு ‘க்கு’ வைத்து எனக்கு வாழ்த்து சொல்லியிருந்தார்.
எங்கு சென்றாலும் நான் ஒரு ஆர்எஸ்எஸ்காரன் என்பதை பெருமையாகச் சொல்வேன். உலகின் வல்லரசாக பாரத தேசம் உயர்ந்திட வேண்டும் என்பதுதான் நமது ஒரே சிந்தனையாக இருக்க வேண்டும். பஞ்சத்தில் இருந்தவர்கள் உலகிற்கு அள்ளிக் கொடுக்கும் வகையில் உயரக் காரணம் பிரதமர் மோடி. தேசத்தின் வளர்ச்சிக்காகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மலைவாழ், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, வறுமையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் எனக்கு கொடுத்த ஆளுநர் பதவியை பயன்படுத்துவேன். தமிழரின் பெருமையை உலகறியச் செய்வேன். இவ்வாறு சிபி ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.