அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் இந்தியப் பங்கு வரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) தலைவர் மாதபி பூரி புச் ஆகியோருக்கு காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனம் பொய் எனக் கூறி நிராகரித்தது. ஹிண்டன்பா்க் ஆராய்ச்சி அறிக்கையைத் தொடா்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்தன. நாட்டின் முன்னணி நிறுவனங்களான எல்ஐசி மற்றும் எஸ்பிஐ நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கும் நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்திருப்பது சாமானிய மக்களின் பணத்தை உள்ளடக்கிய மோசடி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உண்மையை நாட்டு மக்களிடம் தெரிவிக்குமாறும் கோரி வருகின்றன.
அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, செபி தலைவருக்கு ஜெய்ராம் ரமேஷ் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
தற்போதைய மோசடி குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் அதானி குழும நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தொடா்ந்து அனுமதிக்கப்படுகின்றன. அதானி குழுமத்தின் மீது சா்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால், தேசிய பங்குச் சந்தை இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. செபி நடவடிக்கை எடுப்பது எப்போது? அதானி குழுமத்தின் மீதான நடவடிக்கையைத் தாமதப்படுத்த மத்திய அரசு அழுத்தம் அளிக்கிறதா? விசாரணைகள் நியாயமாகவும், எந்த தயக்கமும் இல்லாமலும் முழுமையாகவும் இருக்க வேண்டும். அதானி மீதான மோசடி புகாா் குறித்து முறையாக விசாரித்து, முதலீட்டாளா்களின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பு செபி-க்கு உள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், இந்திய பெருநிறுவன நிர்வாகத்தின் மீதும், இந்தியாவின் நிதி கட்டுப்பாட்டாளர்கள் மீதும் நோ்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறது. மேலும், உலகளவில் நிதி திரட்டும் நமது திறன் பாதிக்கப்படலாம். அதானி குழுமம் மீது சுமத்தப்பட்டுள்ள ஏராளமான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிதி நிறுவனங்கள் ஏன் அதானி குழுமத்தின் பங்குகளை அதிக அளவில் வாங்கியுள்ளன என்று கேள்வி எழுப்பியுள்ளார். 30 கோடி இந்தியர்கள் தங்களுடைய வாழ்நாள் சேமிப்பு நிறுவனமாக நம்பிக்கை வைத்துள்ள எல்ஐசி, சமீபத்திய நாள்களில் அதானி குழுமப் பங்குகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்துள்ளது. இதுபோன்ற பொதுத்துறை நிதி நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளில் தனியார் துறை நிறுவனங்களை விட பழமைவாதமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டாமா? இதுதொடர்பாக மத்திய அரசிடம் இருந்து அழுத்தம் அளிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், “ரிசர்வ் வங்கி இரண்டு அம்சங்களைக் கவனிக்க வேண்டும்: ஒன்று, இந்திய வங்கி முறையின் உண்மையான அதானி குழுவின் வெளிப்பாடு என்ன? இரண்டு, அதானி குழுமம் இந்திய வங்கிகளால் பிணை எடுக்கப்படும் என்று கொடுக்கப்பட்ட வெளிப்படையான மற்றும் மறைமுகமான உத்தரவாதங்கள் என்ன? வெளிநாட்டு நிதி வற்றிவிட்டதா?” என்று கடிதத்தில் கூறியுள்ளார்.