பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் உயிரிழந்தவர்களுக்கு இந்து அமைப்புகள், பா.ஜனதா சார்பில் கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டது. கோவையில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடி ஒருவரை துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளனர். இந்த கொலை நடைபெற்ற பின்னர் 2 கொலைகள் நடந்துள்ளது. அன்றைய தினம் மட்டும் ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 9 கொலைகள் நடந்துள்ளது. ரவுடிகளுக்கு அச்சம் இல்லாமல் போய்விட்டது. முன்பு ஹெல்மெட் அணிந்த படி தப்பிச்செல்வார்கள். இப்போது கொலைகளை செய்துவிட்டு மிக தைரியமாக நடமாடுகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு தோற்று உள்ளது.
தமிழ்நாட்டில் பதிவுத்துறையில் பல நூறுகோடி ரூபாய் கையூட்டு நடைபெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 15 நாள் அவகாசம் தருகிறோம். அப்போதும் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகம் முன்பும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. அதில்அ.தி.மு.க. தலைவர்கள் வருவார்கள். எங்களை பொறுத்தவரை இரட்டை இலை சின்னத்தில் வெற்றி வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதுதான்.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நெடுமாறன் தொடர்ந்து இதுபோன்று பேசி வருகிறார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக மத்திய உள்துறை மந்திரியிடம் கூறுவோம். தமிழ்நாட்டில் இப்படி ஆட்சி நடந்தால் சாமானிய மக்களுக்கு ஆபத்து. காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். குற்றவாளிகளுக்கு தண்டனையை உயர்த்துங்கள், மூடி மறைக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.