டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி ஆய்வு (சர்வே) மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது என மத்திய அரசை விமர்சித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இதற்கு முன்பு குஜராத் மாநில முதல்வராக இருந்தார். இவர் முதல்வராக பதவி வகித்த 2002ம் ஆண்டில் குஜராத்தில் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. அதாவது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் சாதுக்கள், இந்து யாத்ரீகர்கள் இறந்த நிலையில் பல இடங்களில் வன்முறை வெடித்து ஏராளமான இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் நரேந்திர மோடி உள்பட பல அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நரேந்திர மோடியை விடுதலை செய்தது. இந்நிலையில் தான் 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் 2 பகுதிகளாக ஆவணப்படம் தயாரித்து சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில் பலரும் தடையை மீறி ஒளிபரப்பு செய்தனர். இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் தான் நேற்று டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து ஆய்வு(சர்வே) மேற்கொண்டனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த பதிவில், ‛‛முதலில் பிபிசி ஆவணப்படம் வந்தது, அது தடை செய்யப்பட்டது. இப்போது பிபிசியை ஐடி ரெய்டு செய்துள்ளது. இது அறிவிக்கப்படாத அவசரநிலை” என சாடியுள்ளது.