திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

21 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெரும் போராட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வேட்பாளர் கே.எஸ். தென்னரசு களமிறக்கப்பட்டுள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பின் இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேபோல் திமுக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார், வாக்காளர் பட்டியலில் உள்ள பிரச்சினைகள் என்று அதிமுகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். நேற்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, 2வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறார்.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளத்தில் எடப்பாடி பழனிசாமி வாகன பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. இதனை சரி செய்ய வேண்டும் என்று ஈரோடு அதிமுகவினர் கோரிக்கை அளித்தனர். அதன் பின்னர், ரூ.484 கோடி அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் செய்யப்பட்டது. அதனை நானே நேரடியாக திறந்து வைத்தேன். மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்தது அதிமுக தான். அதேபோல் ஏழை எளிய மக்களுக்கு சிறந்த சிகிச்சையளிப்பதற்காக அதிமுக ஆட்சியில் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தியது அதிமுக தான். இதுபோல் அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன. இன்று 21 மாத திமுக ஆட்சியில் தமிழ்நாடு மக்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யப்படவில்லை.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடுகிறது. அவர்களுக்கு ஆதரவாக 25 அமைச்சர்கள் முகாமிட்டு, பணியாற்றி வருகின்றனர். இதுவரை ஒரு அமைச்சர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வந்திருந்தால் கூட, ஈரோடு கிழக்கு தொகுதி மேம்பட்ட தொகுதியாக இருந்திருக்கும். இன்று மக்களின் கோரிக்கைகளை அமைச்சர்களாக கேட்டு குறித்து வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஏன் இவற்றை முன்னதாகவே செய்யவில்லை. மக்களை ஏமாற்றி 2021 தேர்தலில் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு வெற்றிபெற்றார்கள். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் 520 அறிவிப்புகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார். ஆனால் இதுவரை எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் 85 சதவிகித அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சை பொய்யை பேசி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.